Tuesday, 26 January 2021
History of ABJ Abdul Kalam
Monday, 25 January 2021
வீட்டில் பூச்செடி வளர்ப்பு முறை
செண்டுமல்லி சாகுபடி முறை
கோவை அய்யாமுத்து வரலாறு
பிறப்பு : கி.பி.1898
இறப்பு : 20-12-1975
பெற்றோர் : அங்கண்ணன், மாரம்மாள்
இடம் : காங்கயம், கோவை மாவட்டம், தமிழ்நாடு
புத்தகங்கள் : நச்சுப்பொய்கை, இராஜபக்தி, மேவாரின் வீழ்ச்சி, பிச்சைக்காரி
வகித்த பதவி : இந்திய விடுதலைப் போராட்ட வீரர்
வரலாறு:-வாழ்க்கை வரலாறு
கோவை அய்யாமுத்து ஒரு தமிழ் எழுத்தாளர், காந்தியவாதி மற்றும் இந்திய விடுதலைப் போராட்ட வீரர்; சர்வோதயா இயக்கத்தின் தலைவர்களில் ஒருவர். காந்தியுடன் நெருக்கமான தொடர்பு கொண்டிருந்தார். ஈ. வே. ராமசாமியின் நண்பராக இருந்தார். இவரது ‘எனது நினைவுகள்’ என்ற தன்வரலாற்று நூல் தமிழக அரசியல் வரலாற்று ஆவணமாக விளங்குகிறது.
அய்யாமுத்து கோவை மாவட்டம் காங்கயத்தை அடுத்த பரஞ்சேர்வழி கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். இவரது தந்தை அங்கண்ணன்; தாய் மாரம்மாள். இவர் கொங்கு வேளாளர் சமூகத்தில் பயிரன் கூட்டத்தை சேர்ந்தவர்.
அய்யாமுத்துவின் மூத்த சகோதரர் நஞ்சப்பன். 1903ம் ஆண்டில் ஐந்து வயதுப்பையனாக இருந்தபோது கோயமுத்தூர் ஆதம்சா மக்கான் கொட்டகையில் நடைபெற்ற நல்லதங்காள் நாடகத்தில் வேடமிட்டார். அது அய்யாமுத்துவை கலையிலக்கிய தளம் நோக்கி ஈர்த்தது. மாணவராக இருக்கையில் வ. உ. சியையும் சுப்ரமணிய சிவாவையும் போலீஸார் விலங்கிட்டு தெருத்தெருவாக இழுத்துச்சென்றதை கண்டு சுதந்திர ஆர்வம் கொண்டார்.
1918ல் முதல் உலகப்போரின்போது ஐரோப்பியப் படையில் சேர்ந்தார். பஸ்ரா, மெஸபடோமியா போன்ற நாடுகளில் பணியாற்றியிருக்கிறார். 1921ல் கிணத்துக்கடவைச் சேர்ந்த கோவிந்தம்மாளை மணம் செய்து கொண்டார். 1921ல் கோவைக்கு வருகை தந்த காந்தியின் உரை கேட்டு தம்பதியர் காங்கிரஸில் இணைந்தார்கள். இருவரும் இணைந்து சுதந்திரப் போராட்டத்தில் பணியாற்றினர்.
இருவரும் 1923ல் கோவையில் குடியேறினார்கள். காந்தியின் ஆணைப்படி கதரியக்கத்தை கோவையில் ஆரம்பித்தார். கோவையில் அகில பாரத சர்க்கா சங்கத்தின் கதர் உற்பத்திசாலையை நிறுவினார். 1931ல் போலீஸ் குடியிருப்பில் தண்ணீர் எடுக்க ஒரு தலித் போலீஸ் காவலரை மற்ற ஜாதிகளை சேர்ந்த போலீசார் அனுமதிக்கவில்லை. இதைக் கேள்விப்பட்ட அய்யாமுத்து தன் மனைவியுடன் அங்கு சென்று அந்தத் கிணற்றுக்கு அவரை அழைத்துச் சென்று தண்ணீர் இறைக்கச்செய்தார். அதிலிருந்து ஹரிஜன இயக்கத்தில் ஆர்வம் கொண்டு பணியாற்றினார்.
அக்காலத்தில் ஈ. வே. ராமசாமியுடன் நட்பு கொண்டார். 1924ல் வைக்கம் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறைசென்றார். பின்னர் சுசீந்திரம் ஆலயப்பிரவேசப் போராட்டத்திலும் தீவிரப் பங்கேற்றார். 1926ல் பாரத சர்க்கா சங்கத்தின் தமிழ்நாட்டு செயலாளர் எஸ். இராமநாதன் வேண்டுகோளை ஏற்று எர்ணாகுளம் வஸ்திராலயத்தை வழிநடத்தினார்.
1933ல் திருப்பூர் கதர் வஸ்திராலயத் தலைவரானார். 1936ல் தமிழ்நாடு சர்க்கா சங்கத் தலைவரானார். 1940 வரை கதர் இயக்கத்தின் தீவிர வெற்றிக்குக் காரணமாக இருந்தனர். கதர் அய்யாமுத்து என்று அவரை அக்காலகட்டத்தில் அழைத்தார்கள். 1932ல் காந்தி சிறைப்பிடிக்கப்பட்டதை எதிர்த்துப் போராடியதால் ஆறுமாதக் கடுங்காவல் தண்டனை பெற்றார் அய்யாமுத்துவின் மனைவி. கிட்டத்தட்ட ஆறாண்டுகள் இந்திய சுதந்திரப் போராட்டத்திற்காக சிறையில் இருந்திருக்கிறார் அய்யாமுத்து.
சுதந்திரத்திற்குப் பின்னர் கதரியக்கத்திலும் கிராம நிர்மாணத்திலும் பணியாற்றினார். ராஜாஜியின் அரசியல் வழியை பின் தொடர்ந்தார். 1950ல் நாசிக் காங்கிரஸ் மாநாட்டுக்குப் பின் தீவிர அரசியலை விட்டு ஒதுங்கினார். 1960லிருந்து 1967 வரை சுதந்திரக் கட்சியில் பணியாற்றினார். கதர் இயக்கத்துக்காகக் குடிநூல் என்னும் இதழை நடத்தி வந்தார்.
1951ல் பொள்ளாச்சி அருகே கோதைவாடி என்னும் ஊரில் 23 ஏக்கர் நிலம் வாங்கி காந்தி பண்ணை என்று பெயரிட்டு வேளாண்மை செய்து வந்தார். தம் இல்லத்துக்கு ராஜாஜி இல்லம் என்று பெயர் சூட்டினார்.
மூன்று முறை இதயநோயால் தாக்கப்பட்டு நலிவுற்ற அய்யாமுத்து 21-12-1975ல் காலமானார். இவர் காலமான அடுத்த வாரமே 27-12-1975ல் இவருடைய துணைவியார் கோவிந்தம்மாளும் காலமானார்
ஜவஹர்லால் நேரு வரலாறு
பிறப்பு : 14.11.1889
இறப்பு : 27.05.1964
பெற்றோர் : மோதிலால் நேரு, சுவரூப ராணி அம்மையார்
இடம் : உத்தரப் பிரதேசம்
புத்தகங்கள் : விடுதலையை நோக்கி (Toward Freedom), கண்டுணர்ந்த இந்தியா (Discovery of India), உலக வரலாற்றுத் துளிகள் (Glimpses of World History)
வகித்த பதவி : இந்தியாவின் முதல் பிரதமர்
விருதுகள் : பாரத ரத்னா
வரலாறு:-ஜவஹர்லால் நேரு
👉ஜவஹர்லால் நேரு அவர்கள் 1889ஆம் ஆண்டு நவம்பர் 14ஆம் தேதி உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அலகாபாத்தில் பிறந்தார். இவருடைய தந்தை செல்வந்தரும், வழக்கறிஞருமான மோதிலால் நேரு ஆவார். இவருடைய தாயார் சுவரூப ராணி அம்மையார் ஆவார். இத்தம்பதியினருக்கு நேரு மூன்றாவது குழந்தையாக பிறந்தார்.
👉ஆரம்பக் காலத்தில் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த ஜவஹர்லால் நேருவின் தந்தை மோதிலால் நேரு வழக்கறிஞர் ஆதலால் அப்போது இருந்த ராஜாக்கள், ஜமீன்தார்கள், பெரும் பணக்காரர்களின் வழக்குகளுக்கு இவர் வாதாடியதால் பின்னாளில் பெரும் செல்வந்தராக வளர்ந்து நின்றார். எனவே, மோதிலால் தனது இருப்பிடத்தைப் பணக்காரர்கள் வசிக்கும் பகுதிக்கு மாற்றிக்கொண்டார்.
👉ஜவஹர்லால் நேரு பிறக்கும்போது மாளிகை போன்ற வீட்டில் செல்வ செழிப்புகளுடன், பெரிய அந்தஸ்துடன் இருந்துள்ளது. ஜவஹர்லால் நேருவுடன் பிறந்தவர்கள் இரண்டு சகோதரிகள்,
👉ஒருவர் விஜயலட்சுமி பண்டிட்
👉மற்றொருவர் கிருஷ்ணா நேரு ஹூதீசிங் ஆவார்.
👉இவர்கள் மூவரும் சிறுவயதிலிருந்தே ஆங்கில நாகரிகத்துடன் வளர்க்கப்பட்டவர்கள்.
பெயர் அர்த்தம் :
👉உருதுவில் ஜவஹர்_இ லால் என்றால் 'சிகப்பு நகை' என்று பொருள், இச்சொல்லிலிருந்து 'ஜவஹர்லால்' என்ற பெயர் உருவானது.
ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி :
👉ஜவஹர்லால் நேருவிற்கு இந்தி மொழி, சமஸ்கிருதம் மற்றும் இந்தியக் கலைகள் கற்றுக்கொடுக்கப்பட்டன.
👉மோதிலால் நேரு, இந்தியக் குடிமக்கள் சேவைக்குத் தன் மகன் தகுதி பெற வேண்டும் என்று விரும்பினார். அதற்காக ஜவஹர்லால் நேருவை இங்கிலாந்தில் உள்ள ஹார்ரோவிற்கு அனுப்பினார்.
👉அங்கு அவருக்கு பள்ளிப் பாடத்திட்டம் கடுமையாக இருப்பதாகவும், தங்குமிடம் வீட்டிலிருந்து வெகுதொலைவு இருப்பதாகவும் உணர்ந்தார். இருப்பினும் ஜவஹர்லால் நேரு பள்ளிப்படிப்பை முடித்ததும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுகளை 1907ல் எழுதி, டிரினிட்டி கல்லூரிக்கு சென்று இயற்கை அறிவியல் படித்தார்.
👉ஹார்ரோ கல்லூரி, கேம்ப்ரிட்ஜ் ஆகியவற்றில் படிக்கும்போது அவரின் கலகலப்பான குணத்திற்காக நேருவை 'ஜோ' நேரு என்று அழைப்பார்கள் ஐரோப்பிய நண்பர்கள்.
👉நேரு டிரினிட்டி கல்லூரியில் இயற்கை அறிவியல் மாணவராக இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகியவற்றை படிக்க வேண்டியிருந்தது. கணிதம் அவருக்கு உகந்த பாடமில்லை என்பதால் டிரினிட்டி கல்லூரியில் தாவரவியலை தன்னுடைய விருப்பப்பாடமாக தேர்வு செய்து படித்தார்.
👉1910ஆம் ஆண்டு இயற்கை அறிவியலில் ஹானர்ஸ் பட்டம் பெற்றார். கேம்ப்ரிட்ஜ் மற்றும் டிரினிட்டி கல்லூரியில் படிப்பை முடித்த அவர், இன்னர் டெம்பிலில் சட்டம் பயில பதிவு செய்துக்கொண்டார். அதன்பின் சட்டப்படிப்பை வெற்றிகரமாக முடித்த நேரு தனது சட்டப் பணியை தொடங்க 1912ல் இந்தியா திரும்பினார்.
நேருவின் திருமண வாழ்க்கை :
👉நேரு அவர்கள், 1916ஆம் ஆண்டு பிப்ரவரி 7ஆம் தேதி கமலா கவுல் என்ற பிராமணப் பெண்ணை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு, கமலா நேருவும் சுதந்திர இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.
👉திருமணமான அடுத்த ஆண்டில் இந்திரா பிரியதர்ஷனி என்ற மகள் பிறந்தாள். (பின்னாளில் ஃபெரோஸ் காந்தியை திருமணம் செய்து கொண்ட அவர், 'இந்திரா காந்தி' என என்றழைக்கப்பட்டார்).
👉இருபது ஆண்டுகாலம் நேருவுடன் வாழ்ந்த கமலா நேரு, 1936ல் புற்றுநோயால் இறந்தார். கமலா நேருவின் இறப்பிற்கு பிறகு, கடைசிவரை தனியாகவே வாழ்ந்தார் நேரு.
அரசியல் வாழ்க்கை :
👉மாணவராக இருந்த காலத்திலிருந்தே அயல்நாட்டின் பிடியில் இருந்து பாதிக்கப்பட்டு விடுதலைக்காக போராடுகின்ற தேசங்களின் மீது அவர் ஆர்வம் காட்டி வந்தார். பின் இந்தியாவின் விடுதலை போராட்டத்தில் அவர் ஈர்க்கப்பட்டு அதில் இணைந்து போராடினார்.
👉வழக்கறிஞர் தேர்வில் வெற்றி பெற்று பணியாற்றிக்கொண்டு இருக்கின்றபோதே நேருவிற்கு இந்திய அரசியலின் மீது ஆர்வம் ஏற்பட்டது.
👉அதன்பின் காங்கிரஸ் இயக்கத்தில் காந்தியின் தலைமையின் கீழ் செயல்பட்டார். 1913ஆம் ஆண்டு காந்தியடிகளின் பொது உரிமை போராட்டத்திற்கு (Civil rights Campaign) நிதி வசூலித்துக் கொடுத்தார்.
சுதந்திர போராட்டத்தில் ஜவஹர்லால் நேரு :
👉ஜவஹர்லால் நேரு 1916ல் மகாத்மா காந்தியை முதன்முதலில் சந்தித்தார். முதல் சந்திப்பின்போதே அவர் மகாத்மா காந்தியால் வெகுவாக ஈர்க்கப்பட்டார். இது காந்தி-நேரு இருவருக்குமான இணைப்பிரியா தோழமையின் தொடக்கமாக அமைந்தது.
👉1917ஆம் ஆண்டு அன்னி பெசன்ட் அம்மையார் துவங்கிய தன்னாட்சி இயக்கத்தின் செயலாளர் ஆனார்.
👉'தி இன்டிபென்டன்ட்' இதழை தன்னுடைய தந்தை மோதிலால் நேருவுடன் இணைந்து 1919ல் ஆரம்பித்தார்.
👉நேஷனல் ஹெரால்டு என்ற பத்திரிக்கையை 1938ஆம் ஆண்டு நேரு துவங்கி நடத்தினார்.
👉1919ல் நடந்த 'ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவம்' நேருவை சுதந்திர போராட்டத்தில் ஈடுபட வழிவகுத்தது எனலாம். இந்தியாவின் அம்ரித்சர் நகரில் ஜாலியன் வாலாபாக் என்ற இடத்தில் ஆயுதம் ஏதுமின்றி கூட்டத்தில் பேச்சை கேட்டுக்கொண்டிருந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என பாராமல் ஆங்கில அரசு ரெஜினால்ட் டையர் என்ற ராணுவ அதிகாரியின் தலைமையில் அப்பாவி மக்களைக் கொன்று குவித்தது.
👉அப்பாவி மக்களின் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் வெள்ளையர் ஆட்சியின் மீது நேருவுக்கு வெறுப்புணர்வை அதிகரித்தது மட்டுமல்லாமல் காங்கிரஸ் கட்சியில் அவரை ஈடுபடுத்திக் கொள்ளவும் காரணமாக அமைந்தது.
👉காந்தியின் கொள்கைகளின் மீது அதிக ஈடுபாடுகொண்ட நேருவும், அவருடைய குடும்பமும் விலையுயர்ந்த மேற்கு ஆடைகள் உடுத்துவதை தவிர்த்து கதர் ஆடையை உடுத்தினர்.
👉தந்தையை விடுதலைப் போரில் ஈடுபடுத்திய பெருமை நேருவை சேரும். 'மோதிலால் நேரு இந்திய விடுதலைப் போரில் ஈடுபடக்காரணம் அவர் மகன் மீதான அன்பே. நேருவின் மீதான அன்பே தேசப் போராட்டத்தில் அவரை ஈடுபடுத்தியிருக்கிறது' என்றார் காந்தியடிகள்.
👉காந்தியின் நம்பிக்கைக்குரியவர்களில் ஒருவராக மாறிய நேரு, 1920ல் காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கெடுத்ததற்காக 1921ல் முதன் முதலாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சில மாதங்கள் கழித்து விடுதலை செய்யப்பட்ட அவர், 1924-ல் அலகாபாத் நகராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
👉இரண்டு ஆண்டுகள் தலைமை நிர்வாகியாக சிறப்பாக பணியாற்றிய அவர், 1926ல் தனது பணியை ராஜினாமா செய்தார். பின்னர் 1926 முதல் 1928 வரை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளராக பணியாற்றினார்.
👉நேருவின் தந்தையார் மற்றும் சி.ஆர்.தாஸ் தொடங்கிய 'சுயராஜ்ய கட்சி'-யில் நேரு சேராமல், காந்தியுடனே பணியாற்றினார். நேரு, சுபாஷ் சந்திரபோஸ் அவர்களுடன் இணைந்து பிற விடுதலை பெற்ற நாடுகளுடன் நல்லுறவை பேண விரும்பினார்.
சுதந்திர போராட்டத்தில் நேருவின் பங்கு :
👉இந்திய சுதந்திர போராட்டத்தின் சர்வதேச கண்ணோட்டத்தின் வளர்ச்சியில் நேரு முக்கிய பங்கு வகித்தார்.
👉நேரு இந்தியாவிற்காக வெளிநாட்டு நட்பு நாடுகளை நாடினார். மேலும் உலகம் முழுவதும் சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்திற்கான இயக்கங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தினார்.
👉1926ல் இத்தாலி, சுவிட்சர்லாந்து, இங்கிலாந்து, பெல்ஜியம், ஜெர்மனி, ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார்.
👉1927ஆம் ஆண்டில், அவரது முயற்சிகள் பலனளித்தன. இந்திய தேசிய காங்கிரஸின் பிரதிநிதியாக பெல்ஜியம் புரூசல் பகுதியில் நடைபெற்ற ஒடுக்கப்பட்ட நாடுகளின் கூட்டத்தில் அவர் பங்கேற்றார்.
👉பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திலிருந்து சுதந்திரத்திற்கான போராட்டத்தை பெருநகரத்தின் பல்வேறு பகுதிகளில் பல தேசிய முயற்சியாக நேரு கண்டார்.
நேரு - சுபாஷ் சந்திர போஸ் :
👉உலகெங்கிலும் உள்ள சுதந்திர நாடுகளின் அரசாங்கங்களுடன் நல்ல உறவை வளர்ப்பதில் நேரு, சுபாஸ் சந்திர போஸுடன் சேர்ந்து நெருக்கமாக பணியாற்றினார்.
👉இருப்பினும், 1930களின் பிற்பகுதியில் இருவரும் பிரிந்தனர். பிரிட்டிஷாரை இந்தியாவிலிருந்து வெளியேற்றுவதில் பாசிஸ்டுகளின் உதவியை நாட சுபாஷ் சந்திர போஸ் ஒப்புக்கொண்டார்.
👉அதே நேரத்தில், ஸ்பெயினின் உள்நாட்டுப் போரில் பிரான்சிஸ்கோ பிராங்கோவின் படைகளுக்கு எதிராக போராடும் குடியரசுக் கட்சியினரை நேரு ஆதரித்தார்.
👉1928ல் சைமன் கமிஷனுக்கு எதிராக நடைபெற்ற ஊர்வலத்திற்கு தலைமை தாங்கியதால் காவலர்கள் நேருவின் மீது தடியடி நடத்தினர். 1928ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29ஆம் தேதி அவர் அனைத்து கட்சி மாநாட்டில் கலந்துக்கொண்டார்.
👉நேரு முதன்முதலில் இந்திய தேசிய காங்கிரஸை காந்தியின் வழிகாட்டுதலில், 1929ஆம் ஆண்டு லாகூர் நிகழ்ச்சியை தலைமையேற்று நடத்தினார். நேரு தலைமையில் நடைபெற்ற லாகூர் காங்கிரஸ் மாநாட்டில் முழுச் சுதந்திர தீர்மானம் (Poorna swaraj resolution) நிறைவேற்றப்பட்ட பிறகு காங்கிரஸில் நேருவின் முக்கியத்துவம் கூடியது.
👉பின்னர், ஜனவரி 26, 1930ல் சுதந்திரம் கோரி இந்திய சுதந்திரக் கொடி நேருவால் லாகூரில் பறக்கவிடப்பட்டது. அதே ஆண்டில், இந்தியா உடனான ஆங்கிலேயரின் இணைப்பை துண்டித்து 'சுதந்திர இந்தியா' என்ற அமைப்பை அவர் நிறுவினார். பின்பு அதன் பொதுச்செயலராகவும் பொறுப்பேற்றார்.
👉சத்தியாகிரகம் மற்றும் காங்கிரஸால் ஆரம்பிக்கப்பட்ட பல்வேறு இயக்கங்களில் பங்கேற்றதற்காக 1930 முதல் 1935ஆம் ஆண்டுகளில் அவர் பலமுறை சிறையில் அடைக்கப்பட்டார். 1935ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி அல்மோரா சிறையில் அவர் தனது சுயசரிதையை எழுதி முடித்தார்.
👉1938ல் தேசிய திட்டக்கமிட்டியின் தலைவராக நேரு தேர்வு செய்யப்பட்டார். தேச உருவாக்கம் எப்படி அமைய வேண்டும்? என்பதை திட்டமிடும் பொறுப்பு இந்த கமிட்டிக்கு வழங்கப்பட்டிருந்தது.
👉பண்டிட் நேரு 1940ல் இந்தியாவை வலுக்கட்டாயமாக உலக போரில் பங்கேற்க வைப்பதை கண்டித்து தனிநபராக சத்தியாகிரகம் மேற்கொண்டபோது கைது செய்யப்பட்டார். அதன்பின் டிசம்பரில் மற்ற தலைவர்களுடன் இவரும் விடுதலை செய்யப்பட்டார்.
👉1942ல் வரலாறு சிறப்புமிக்க 'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்திற்கான தீர்மானத்தை மும்பையில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் குழுவில் முன்மொழிந்தார்.
👉இதனால் மற்ற தலைவர்களுடன் நேருவும் கைது செய்யப்பட்டு அகமத் நகர் கோட்டைக்கு அழைத்து செல்லப்பட்டார். இதுவே இவருடைய இறுதியான மற்றும் நீண்டகால சிறைவாசமாகும். இதேபோன்று இவர் 9 முறை கைது செய்யப்பட்டார்.
👉விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக 3,269 நாட்களை நேரு சிறையில் கழித்தார். அங்கே பல அற்புதமான நூல்களை எழுதினார்.
👉ஆங்கிலேயர் ஆட்சி செய்யாத மாகாணங்களை சேர்ந்தவர்களையும் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராக்கும் திட்டத்தை நேருவே செயல்படுத்தினார்.
👉நேருவிற்கு பேரன் பிறந்தபோது மன்னிப்பு கேட்டால் சிறையை விட்டு அனுப்புகிறோம் என்று ஆங்கிலேயர் கூறவே அதை மறுத்துவிட்டார் நேரு.
👉தெருவில் போலீஸ் வாகனம் போகும்போது விளக்கு வெளிச்சத்தில் பேரனை தூக்கி இந்திரா காண்பிக்க, பேரனை பார்த்துவிட்டு, 'இவர்கள் வெளிச்சத்தில் வாழவேண்டும் என்றுதான் நாங்கள் இருளில் உழல்கிறோம்!' என்று கடிதம் எழுதினார்.
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் :
👉1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து தனி சுதந்திர நாடாக இந்தியா விடுதலை பெற்றது. புதுடெல்லியில் சுதந்திர இந்தியாவின் கொடியை ஏற்றும் தனிப்பெருமை நேருவிற்கு வழங்கப்பட்டது. அன்று முதல், சுதந்திர இந்தியாவின் வளர்ச்சிக்கு தன்னை முழுவதுமாக அற்பணித்துக்கொண்டார்.
👉இந்தியாவில் முதல் தேர்தல் 1951ஆம் ஆண்டு டிசம்பரில் தொடங்கி 1952ஆம் ஆண்டு மே வரை நடைபெற்றது. முதல் இந்திய தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மை பெற்று ஜவஹர்லால் நேரு, தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய பிரதமர் என்ற சிறப்பை பெற்றார். மிக அதிக காலம் இந்தியாவின் பிரதமராக இருந்தவர் என்கிற சாதனைக்குரியவர் நேரு.
மொழிவாரி மாநிலம் :
👉1948ஆம் ஆண்டில் ஜவஹர்லால் நேரு, வல்லபாய் படேல், பட்டாபி சீதாராமையா ஆகிய மூவரையும் உறுப்பினராக கொண்டு காங்கிரஸ் கட்சி அமைத்த 'ஜேவிபி' குழுவின் மொழிவாரி மாகாண உருவாக்கத்தை இவர் ஆதரிக்கவில்லை.
👉பிரிவினையை மதரீதியாக நிகழ்த்தி தேசம் தூண்டப்பட்டதால் மொழிவாரி மாநிலங்களுக்கு நேரு அனுமதி தர மறுத்தார்.
👉சென்னை மாகாணத்திலிருந்து தெலுங்கு பேசும் மக்களுக்கான தனி மாகாணமான ஆந்திரா உருவாக்கப்பட வேண்டுமென்று வலியுறுத்தி, உண்ணாவிரதமிருந்து பொட்டி ஸ்ரீராமுலு 1952ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உயிர் நீத்தார்.
👉பொட்டி ஸ்ரீராமுலுவின் மறைவுக்கு மூன்று தினங்களுக்குப் பின் ஆந்திர மாநிலம் அமைக்கப்படுமென்று இந்தியப் பிரதமர் நேரு அறிவித்தார்.
👉இந்தியை தேசிய மொழியாக்க முயற்சிகள் நிகழ்ந்த பொழுது இந்தி பேசாத மாநிலங்களின் அச்சத்தைக் கருத்தில் கொண்டு 'நீங்கள் விரும்பும் வரை ஆங்கிலத்தையே பயன்படுத்தலாம்' என்று உறுதிமொழி தந்தார் நேரு.
👉அவரது ஆட்சியில், இந்தியாவின் வளர்ச்சிக்கு பல திட்டங்களை தீட்டி, நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு சென்றார் என்றால் அது மிகையாகாது.
👉1955ஆம் ஆண்டில், நேருவுக்கு இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
நேருவால் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் :
👉ஐந்தாண்டு திட்டங்கள்
👉வெளியுறவு கொள்கையில் பஞ்சசீலக் கொள்கை
👉அணிசேராக் கொள்கை
👉அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு இடப்பட்ட அடித்தளம்
👉பாகிஸ்தான், சீனப் போர் நெருக்கடிகள்
👉மாநிலங்களின் ஒற்றுமை மற்றும் நலன் கருதி கொண்டுவரப்பட்ட மாநில மறுசீரமைப்பு மற்றும் அலுவல் மொழி ஆணையம்
👉அரசாங்கத்தின் தொழிற்சாலைகளின் முதலீடு மற்றும் விவசாயத்தை வரையறுத்தது
👉தொழிற்சாலைகளை அதிகப்படுத்துதல்
👉வருமான வரிகள் மூலம் கலப்பு பொருளாதாரத்தை உருவாக்குதல்
👉சுரங்கம், மின்சாரம் மற்றும் கனரக இயந்திரங்கள் தொழிற்சாலைகளை அரசாங்கமே நடத்தத் திட்டம்
👉நில மற்றும் பங்கீட்டை முதன்மைப்படுத்துதல்
👉விவசாயக் கிணறுகள்
👉அணைகள் கட்டுதல்
👉விவசாய உற்பத்தியை பெருக்க உரங்கள் உபயோகிக்கும் முறையை செயல்படுத்தியது
👉அணு ஆற்றலில் இந்தியா சிறந்து விளங்கும் திட்டங்கள் ஆகியவை குறிப்பிடத்தக்க வரலாற்று நிகழ்வுகளாகும்.
கல்வி திட்டங்கள் :
👉நேரு, 'இந்தியாவின் எதிர்கால முன்னேற்றம், குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் கல்வியை மேம்படுத்துவதில் தான் இருக்கிறது' என்பதை நன்கு உணர்ந்தார்.
👉அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம்,
👉இந்திய தொழில்நுட்ப கழகங்கள்,
👉இந்திய மேலாண்மை கழகங்கள்,
👉தேசிய தொழில்நுட்ப கழகங்கள் போன்ற அரசாங்க உயர்கல்வி நிறுவனங்களை ஏற்படுத்தி கவனித்து வந்தார்.
👉இலவச கட்டாய கல்வி திட்டத்தை செயல்படுத்தி ஆயிரக்கணக்கான பள்ளிகளை கட்டினார்.
👉சிறந்த கிராமப்புறத் திட்டங்களை ஏற்படுத்தி, பள்ளிகளில் இலவச சத்துணவு திட்டத்தையும் அமல்படுத்தினார்.
👉தாழ்த்தப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு, அரசுப்பணிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீட்டினை ஏற்படுத்தினார்.
நேருவின் வெளியுறவு கொள்கைகள் :
👉நேரு அவர்கள், பல பிரச்சனைகளை திறம்பட சமாளித்து தீர்த்ததால், உலக பார்வையில் 'சமாதானப்படுத்துவதில் மன்னர்' என்றும் ஐக்கிய நாடுகளின் வலுவான ஆதரவாளராகவும் போற்றப்பட்டார்.
👉நேரு இந்திய வெளியுறவு கொள்கையின் சிற்பி எனப் போற்றப்படுகிறார். இந்திய மற்றும் சீன உறவை பேணுவதற்காகவும், அண்டை நாடுகளோடு நட்புறவை நிலை நிறுத்துவதற்காகவும் பஞ்சசீல கொள்கையை வெளியிட்டார்.
பஞ்சசீல கொள்கை :
👉நாடுகள் ஒன்றுக்கொன்று பிரதேச ஒருமைப்பாட்டையும், இறையாண்மையையும் மதித்தல்
👉ஆக்கிரமிப்பை தவிர்த்தல்
👉பிற நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடாமல் இருத்தல்
👉சமத்துவம்
👉பரஸ்பர உதவி மற்றும் சமாதான சகவாழ்வு ஆகியவையே பஞ்சசீல கொள்கைகளாகும்.
அணிசேரா இயக்கம் :
👉அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையே இரண்டாம் உலகப் போருக்கு பின் பனிப்போர் நிலவிய நிலையில் நேரு இரு நாடுகளோடும் சேராமல் மூன்றாம் உலக நாடுகள் தனி அமைப்பாக செயல்படுவதற்காக அணிசேரா இயக்கத்தை (Non-alignment Movement)தொடங்கினார்.
👉முன்னாள் பிரிட்டிஷ் குடியேற்ற நாடுகளை கொண்ட காமன்வெல்த் அமைப்பில் இந்தியா தொடர்வதற்கு நேரு வழிவகை செய்தார்.
👉நேரு பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச அமைப்புகளால் பதினொரு முறை நோபல் (அமைதி) பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.
👉விண்வெளி மற்றும் அணுசக்தி துறையில் முன்னேற்றத்திற்கான விதைகள் அவர் காலத்திலே போடப்பட்டன. அயல்நாட்டில் இருந்த இந்திய விஞ்ஞானிகள் பலர் நேருவின் வேண்டுகோளால் இந்தியாவில் சேவை செய்ய வந்து சேர்ந்தார்கள்.
நேருவின் மறைவு :
👉நேருவின் ஆட்சிக்காலத்தில் இந்தியாவின் முதலாவது தேசிய ஆய்வுக்கூடமாகிய தேசிய இயற்பியல் ஆய்வுக்கூடமும், அதை தொடர்ந்து மேலும் 17 தேசிய ஆய்வுக்கூடங்களும் ஏற்படுத்தப்பட்டன. 1948ஆம் ஆண்டு ஹோமி ஜஹாங்கீர் பாபா தலைமையில் இந்திய அணுசக்தி ஆணையம் நிறுவப்பட்டது.
👉சீனா உடனான போரில் இந்தியா தோல்வி அடைந்ததை அடுத்து பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நேருவின் மீது முதன்முதலாக நம்பிக்கை இல்லாத தீர்மானம் கொண்டு வந்தன. ஆனால், தீர்மானம் தோல்வி அடைந்தது.
👉சீனாவைப்பற்றி அவரின் 'உலக வரலாற்றுத்துளிகள் (Glimpses of World History)' நூலில் நூற்றுக்கும் மேற்பட்ட குறிப்புகள் காணப்படுகின்றன. அந்த தேசம் திடீர் தாக்குதல் தொடுத்து எல்லை சிக்கலை தீர்க்க பார்த்தது பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இதனால் ஐந்து மாதங்களில் மூன்று முறை பக்கவாதத்துக்கு உள்ளாகி இறுதி நாட்களை நோக்கி நகர்ந்தார்.
👉1964ஆம் ஆண்டு காஷ்மீரிலிருந்து திரும்பிய நேரு பக்க வாதத்தாலும், மாரடைப்பாலும் அவதிப்பட்டார். அவர் 1964, மே 27ஆம் தேதி அதிகாலை இறைவனடி சேர்ந்தார். அவருடைய உடல், யமுனை நதிக்கரையில் உள்ள சாந்திவனத்தில் தகனம் செய்யப்பட்டது. இவரின் மறைவிற்கு ஆயிரக்கணக்கான மக்கள் மௌன அஞ்சலி செலுத்தினர்.
நேருவின் இறுதி ஆசை :
👉நான் இறந்த பிறகு எனது உடலை எரியூட்ட வேண்டும். எந்தவிதமான மதச்சடங்குகளும் செய்யக்கூடாது. அவற்றில் எனக்கு நம்பிக்கையும், உடன்பாடும் இல்லை.
👉கொஞ்சம் சாம்பலை எடுத்து கங்கையில் கரையுங்கள். கங்கையில் கரைக்கச் சொல்வது மத நம்பிக்கையினால் அல்ல. கங்கை நான் நேசித்த ஜீவநதி. அதனோடு சங்கமிக்க விரும்புகிறேன்.
👉மிச்சமிருக்கிற சாம்பலை இந்தியாவின் வயல்கள் எங்கும் தூவுங்கள். உழவர்கள் உழுது தானியங்களை விளைவிக்கும் அந்த மண்ணோடு மண்ணாக, இந்தியத் திருநாட்டின் காற்றோடு காற்றாகக் கலந்து கிடக்க விரும்புகிறேன் என்றார்.
👉ஒரு சுதந்திரமான, சமத்துவமான ஜனநாயக நாட்டை உருவாக்க வேண்டும் என்ற நேருவின் கனவுதான் இந்தியாவிற்கு வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தது என்றால் அது மிகையாகாது.
நேருவின் படைப்புகள் :
👉விடுதலையை நோக்கி (Toward Freedom)
👉கண்டுணர்ந்த இந்தியா (Discovery of India)
👉உலக வரலாற்றுத் துளிகள் (Glimpses of World History)
நேருவின் பெயரை பறைச்சாற்றும் நினைவுச்சின்னங்கள் :
👉இந்தியா முழுவதும் கல்விநிலையங்கள், விளையாட்டு அரங்கங்கள், தெருக்கள், சாலைகள் மற்றும் பல பொது நிறுவனங்களுக்கு நேருவின் பெயர் சூட்டப்பட்டு அவருடைய நினைவைப் பறைச்சாற்றுகின்றன.
👉1989ஆம் ஆண்டு, சோவியத் ஒன்றியத்தால் நேருவின் தபால் தலை வெளியிடப்பட்டது.
👉மும்பையில் உள்ள ஒரு துறைமுகத்திற்கு 'நேரு துறைமுகம்' என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
👉நேரு பிரதமராக இருந்தபோது, அவர் வசித்து வந்த 'தீன் மூர்த்தி பவன்', தற்போது அவர் நினைவாக அருங்காட்சியகமாக மாற்றப்பட்டு, இந்திய அரசால் பராமரிக்கப்பட்டு வருகிறது.
👉லண்டனில் உள்ள ஆல்ட்விச்சில் நேருவிற்கு சிலை எழுப்பப்பட்டுள்ளது.
👉நேரு அவர்கள், வாழ்நாள் முழுவதும் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் நலன், கல்வி மற்றும் அக்கறையுடன் பாடுபட்டதை நினைவூட்டும் வகையில் அவரின் பிறந்தநாளான, நவம்பர் 14ம் தேதியை இந்தியா முழுவதும் 'குழந்தைகள் தினமாக' கொண்டாடுகிறோம்.
பெரியார் வாழ்க்கை வரலாறு
இயற்பெயர் : ஈ. வெ. இராமசாமி நாயக்கர்
பிறப்பு : 17-09-1879
இறப்பு : 24-12-1973
பெற்றோர் : வெங்கட்ட நாயக்கர் நாயுடு, முத்தம்மாள் என்கிற சின்னத்தாயம்மாள்
இடம் : ஈரோடு, தமிழ்நாடு
வகித்த பதவி : அரசியல்வாதி, சமூக சேவகர்
விருதுகள் : யுனஸ்கோ
வரலாறு:-வாழ்க்கை வரலாறு
பெரியார் என அனைவராலும் அழைக்கப்படும் ஈ.வெ. ராமசாமி அவர்கள், எழுச்சியூட்டும் அரசியல்வாதியாக மட்டுமல்லாமல் சமூக சீர்திருத்ததிற்காவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், சாதி வேற்றுமைகளை அகற்றுவதற்காகவும் போராடிய மிகப்பெரிய பகுத்தறிவாளர். தமிழகத்தின் மிகப்பெரிய கழகமான திராவிடர் கழகத்தை தோற்றுவித்தவர். பெண் விடுதலைக்காகவும், சாதி மற்றும் பாலின சமத்துவம் போன்ற கொள்கைக்காகவும், திராவிடர்கள் பார்பனரல்லாதார் என்ற காரணத்தால் புறக்கணிக்கப்படுவதையும் எதிர்த்துப் போராடிய சமூக சீர்திருத்தத்தின் தந்தை. தென்னிந்தியாவின் சாக்ரட்டிஸ் என்றும் இந்தியாவின் கண்ணிராத பகுத்தறிவு சிற்பி என்றும் போற்றப்பட்டவர் ஈ.வெ. ராமசாமி அவர்கள்.
பிறப்பு:
ஈ.வெ. ராமசாமி அவர்கள், 1879 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17 ஆம் நாள் வெங்கட்ட நாயக்கருக்கும், சின்னதாயம்மைக்கும் மகனாக இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஈரோடு மாவட்டத்தில் பிறந்தார். இவருடைய இயற்பெயர், ஈரோடு வெங்கட்ட இராமசாமி நாயக்கர். இவருக்கு கிருஷ்ணசாமி என்ற சகோதரனும், கண்ணம்மா மற்றும் பொன்னுதாயி என்ற சகோதரிகளும் இருந்தனர். இவருடைய குடும்பம் வசதியான வணிக பின்னணியைக் கொண்டதாக இருந்தது.
ஆரம்ப வாழ்க்கை:
தனது படிப்பை ஐந்தாம் வகுப்புவரை முடித்துகொண்ட ஈ.வெ.ரா, அதன் பின் கல்வி பயில விருப்பம் இல்லாததால் தன்னுடைய 12 வது வயதில் தந்தையின் வணிகத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். தன்னுடைய இளம் வயதிலேயே, தனது பகுத்தறிவு சிந்தனையால், திராவிடத்தை சதியால் அடக்கியாண்ட ஆரியத்தை பல கேள்விகள் கேட்கத் தொடங்கினார். அவருடைய 19 வது வயதில், 13 வயது நிரம்பிய நாகம்மையாரை மணந்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு நாகம்மையார் தன்னுடைய கணவரின் புரட்சிக்கு முழுவதுமாக தன்னை அற்பணித்துக்கொண்டார். திருமணமான இரண்டு ஆண்டுகளில் ஒரு பெண்குழந்தை பிறந்தது. ஆனால், அந்த குழந்தை ஐந்து மாதங்களிலேயே இறந்துவிட்டது. 1902 ஆம் ஆண்டுகளில் கலப்புத் திருமணங்களை நடத்திவைத்தார். அனைத்து சமய, சாதியினருடனும் சேர்ந்து விருந்துண்டார். இதனால் இவருக்கும், இவருடைய தந்தைக்கும் மனக்கசப்பு ஏற்பட்டது. பின்னர், இவருடைய பகுத்தறிவு செயல்களை ஏற்கமுடியாத தந்தையின் கண்டனத்தால் துறவு பூண்டு காசிக்கு சென்றார்.
காசிக்கு பயணம்:
காசியில் அவருக்கு நடந்த நிகழ்வு அவரின் எதிர்கால புரட்சிகர சிந்தனைக்கு வித்திட்டது. பெரியாருக்கும் அவரது தந்தைக்கும் ஏற்பட்ட மனக்கசப்பால் காசிக்கு சென்ற அவருக்கு, அங்கு பிராமணரல்லாதார் வழங்கும் நிதியில் நடத்தப்படும் அன்னசத்திரத்தில் உணவு மறக்கப்பட்டு வீதியில் தள்ளப்பட்டார். இந்த நிலைமையை எண்ணி மிகவும் வருந்தினார். பின்னர் குப்பைத் தொட்டியில் விழும் எச்சில் இலைகளின் உணவை உண்டு பசியாற்றினார். அதுமட்டுமல்லாமல், காசியில் வேசிகளின் வேசமும், திராவிடர்கள் பிச்சைகாரர்களாக இருப்பதையும் மற்றும் புனித கங்கையில் பிணங்கள் மிதப்பதையும் கண்ட அவர் அன்றிலிருந்து இறைமறுப்பாளராக(ஒரு நார்த்திகவாதியாக) தன்னை மாற்றிக் கொண்டார்.
ஆரம்பகால அரசியல் வாழ்க்கை:
காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளில் ஈடுபாடுகொண்ட பெரியார், 1919 ஆம் ஆண்டு தன்னை அக்கட்சியில் இணைத்துக் கொண்டார். காந்தியடிகளின் கொள்கைகளை பின்பற்றியது மட்டுமல்லாமல் பிறருக்கும் எடுத்துக்கூறினார். வெளிநாட்டு துணிகளை விற்பனை செய்யும் வணிகர்களுக்கு எதிராக மறியல் போராட்டங்களையும் நடத்தினார். 1921 ஆம் ஆண்டில் கடைகளை மூட வலியிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட அவர், தன்னுடைய தோட்டத்திலிருந்த 500 தென்னைமரங்களை வெட்டிச்சாய்த்தார். இப்போராட்டத்தில், கைது செய்யப்பட்டு சிறைதண்டனையும் பெற்றார். 1921-1922-ல் ஒத்துழையாமை மற்றும் மிதமாக மதுகுடித்தல் சட்டங்களை எதிர்த்து மறியலில் ஈடுபாட்ட அவர், மீண்டும் கைதுசெய்யப்பட்டார். 1922-ல் சென்னை மாகாண காங்கிரஸ் கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர், திருப்பூரில் நடைபெற்ற கூட்டத்தில் அரசுப் பணிகளிலும், கல்வியிலும் இடஒதுக்கீட்டை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினார். ஆனால், இது இனவேற்றுமையை பிரதிபலிப்பதாக அமைவதால் அன்றைய காங்கிரஸ் கட்சியில் உள்ளவர்கள் ஏற்க மறுத்தனர். இதனால் பெரியார் 1925- ல் அக்கட்சியை விட்டு விலகினார்.
வைக்கம் போராட்டம்:
பெரியாருக்கு காந்தியின் கொள்கைகளில் ஒரு வலுவான நம்பிக்கை இருந்தது. கேரளாவில் வைக்கம் என்னும் ஊரில் அரிசன மக்கள் என்றழைக்கப்படும் தலித் மக்களும், ஈழவர்களும் கோயில் இருக்கும் வீதிகளில் நடக்கவும் கோயிலுக்குள் நுழையவும் தடைவிதிக்கப்பட்டிருந்தது. 1924 ஆம் ஆண்டு டி.கே. மாதவன் அவர்கள், இதை எதிர்த்து காந்திய வழியில் சத்தியாகிரக போராட்டத்தை தொடங்கினார். இப்போராட்டத்தில், நாடெங்குமுள்ள காங்கிரஸ் தலைவர்களும், தொண்டர்களும் கலந்துகொண்டு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். தமிழகத்தின் சார்பாக தந்தை பெரியார் கலந்துகொண்டார் பின்னர், கைது செய்யப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டார். அவருடைய துணைவியான நாகம்மையாரும் இப்போராட்டத்தில் பங்கேற்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பெரியார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கபட்டபோதிலும், அவருடைய தொண்டர்கள் கைவிடாது போராட்டத்தை தொடர்ந்ததால் வெற்றியும் கிட்டியது. இந்த போராட்டதிற்கு பிறகு பெரியார் ‘வைக்கம் வீரர்’ என தமிழக மக்களால் அழைக்கப்பட்டார்.
சுயமரியாதை இயக்கம்:
1925 ஆம் ஆண்டு பெரியாரால் சுயமரியாதை இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது. இந்த இயக்கத்தின் முக்கிய கொள்கையே ‘மூடபழக்க வழக்கங்களை சமுகத்தில் மக்களிடம் இருந்து அகற்றுவதை’ நோக்கமாக கொண்டு செயல்பட்டது. தீண்டாமை, மூடநம்பிக்கை, வர்ணாஸ்ரம தர்மம் கடைபிடிக்கும் பார்ப்பனியம், பெண்களை தாழ்வாக கருதும் மனநிலை போன்றவற்றை எதிர்த்து குரல்கொடுத்தார். தென்னிந்தியாவில் பழம்பெருமை வாய்ந்த திராவிடர்கள் பார்பனரல்லாதார் என்ற காரணத்தால் புறக்கணிக்கப்படுவதையும், அவர்களால் திராவிடர் வாழ்வு சுரண்டப்படுவதையும், பெரியார் எதிர்த்தார். கைம்பெண் மறுமணம் போன்ற புரட்சி திருமணங்களை நடத்திக்காட்டியது மட்டுமல்லாமல் கலப்பு திருமணமுறையையும் இவ்வியக்கம் ஆதரித்தது. கோயில்களில் சட்டத்திற்கு புறம்பாக பின்பற்றப்படும் தேவதாசி முறையையும், குழந்தைகள் திருமணத்தையும் தடைசெய்தது. அரசு நிர்வாகப் பணி மற்றும் கல்வி ஆகியவற்றில் இடஒதுக்கீடு முறையை கடைபிடிக்க இவ்வியக்கம் வலியுறுத்தியது. பின்னர், தன்னுடைய கொள்கைகளையும் சிந்தனைகளையும் பரப்புவதற்கு ‘குடியரசு நாளிதழை’ 1925 ஆம் ஆண்டு தொடங்கினார். சுயமரியாதை இயக்கம், வெகுவேகமாக வளர்ந்தது மட்டுமல்லாமல், மக்களின் ஆதரவையும் பெற்றது. சுயமரியாதையாளர்கள் ஈரோடு மற்றும் பிற மாவட்டங்களிலும், மாநாடுகளும், கூட்டங்களும் நடத்தப்பட்டு மக்களிடைய விழிப்புணர்வை ஏற்படுத்தினர். 1929 முதல் 1932 வரை மலேசியா, ரஷ்யா, ஐரோப்பா, பிரான்ஸ், ஜெர்மனி, கிரிஸ், சிங்கப்பூர், இலங்கை, மேலும் பல வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு தன்னுடைய சுயமரியாதைக் கொள்கைகளை விளக்கிக்கூறினார்.
இந்தி எதிர்ப்பு:
1937 ஆம் ஆண்டு சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் சென்னை மாநிலத்தின் முதலமைச்சராக பதவியேற்றபிறகு ‘இந்தி’ கட்டாயமொழியாக பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் தமிழகம் முழுவதும் எதிர்ப்புகளும், போராட்டங்களும் வெடித்தன. இந்தி பேசும் வடஇந்தியர்களிடமிருந்து தமிழர்களை பிரித்து இரண்டாம் தர குடிமக்களாக காட்டுவது மட்டுமல்லாமல், தமிழர்களின் முன்னேற்றத்தையும், பண்பாட்டையும் சிதைத்துவிடும் என வலியுறுத்தி 1938- ல் நீதிக்கட்சியின் சார்பாக பெரியார் மற்றும் சர்.ஏ.டி. பன்னீர் செல்வம் தலைமையில் நடந்த போராட்டத்தில் பெரியாருடன் பலர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். 1939 ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்ட பெரியார் ‘நீதிக்கட்சியின்’ (1916 ஆம் ஆண்டு பிராமணர்களின் ஆதிக்கத்திற்கு எதிராக தொடங்கப்பட்ட தென்னிந்திய நலஉரிமை சங்கம் என்ற அரசியல் கட்சி பின்னாளில் நீதிக்கட்சியாக மாறியது) தலைவராக பொறுப்பேற்றார். அவரது தலைமையில் நீதிக்கட்சி பெரும் வளர்ச்சிப்பெற்றது. இருப்பினும், நீதிக்கட்சியில் பெரும்பாலான உறுப்பினர்கள் செல்வந்தராகவும், கல்வியறிவு பெற்றவர்களாகவும் இருந்ததால், பெரியாரின் கீழ் செயல்பட மனமில்லாமல் கட்சியிலிருந்து விலகினார்.
பெரியாரின் திராவிட கழகம்:
பெரியார் அவர்கள், நீதிக்கட்சியின் தலைவராக பொறுப்பேற்ற பிறகு ‘நீதிக்கட்சி’ என்ற பெயரை 1944-ல் ‘திராவிட கழகம்’ என பெயர் மாற்றினார். திராவிட கழகத்தின் கொள்கைகள் வெகு விரைவில் மக்களிடத்தில் சேர்ந்தது. திராவிடர் கழகம், சமுகத்தில் பரவிக் கிடந்த தீண்டாமையை ஒழிப்பதிலும், சுயமரியாதை, சாதி எதிர்ப்பு, பகுத்தறிவு, இறைமறுப்பு, பெண் உரிமை மற்றும் பெண்கல்வி போன்றவற்றையும் வலியுறுத்தி தொடங்கப்பட்ட ஒரு சமூக இயக்கமாகும். ‘கருப்பு சதுரத்தின் நடுவே சிவப்பு வட்டம்’ என்பதே திராவிட கழகத்தின் கொடியாக இருந்தது.
பெரியாருக்கும் அண்ணாவிற்கும் இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு:
பெரியாரின் திராவிட கழகம், சமுதாய மறுமலர்ச்சி, விழிப்புணர்வு, மூடநம்பிக்கை ஒழிப்பு, கடவுள் மறுப்பு போன்ற கொள்கைகளை சார்ந்து இருந்ததால், திராவிட கழகத்தை அரசியல் கட்சியாக மாற்ற பெரியார் விரும்பவில்லை. அதுமட்டுமல்லாமல், ‘திராவிடநாடு’ அல்லது ‘தனி தமிழ்நாடு’ என்ற கோரிக்கையையும் முன்வைத்தார். ஆனால் கா.ந. அண்ணாதுரை மத்திய அரசுடன் இணைக்கமாக இருந்து கொண்டு கூடுதல் அதிகாரங்களை கொண்ட மாநில சுயாட்சியை பெறுவதில் அக்கறை காட்டினார். இதனால் இருவருக்குமிடைய கருத்துவேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது. திராவிட கழகத்தின் தொண்டர்களும், உறுப்பினர்களும் கழகத்திலிருந்து விலக சரியான நேரத்தை எதிர்நோக்கி காத்திருந்தபொழுது, ஜூலை 9, 1948 ஆம் ஆண்டு பெரியார் தன்னைவிட 40 வயது இளையவரான மணியம்மையை மறுமணம் புரிந்து கொண்டதை காரணம் காட்டி, அண்ணாதுரை தலைமையிலான திராவிட கழகத்திலிருந்து விலகினார். பின்னர் கா.ந. அண்ணாதுரை தனது வழிகாட்டியான பெரியாரிடமிருந்து பிரிந்து, 1949 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்ற கழகம் (தி.மு.க) என்ற புதிய கட்சியை தொடங்கினார்.
இறுதிகாலம்:
இந்து மத மூடநம்பிக்கைகளை அறவே எதிர்த்த பெரியார், 1952-ல் பிள்ளையார் உருவ பொம்மைகளை உடைத்தது மட்டுமல்லாமல், 1956 ஆம் ஆண்டு இந்துக்களின் கடவுளாக கருதப்பட்ட ராமரின் உருவப்படம் எரிப்புப் போராட்டத்தையும் நடத்தி, கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், 1962 -ல் திராவிட கழகத்தின் பொதுச்செயலாளராக கி. வீரமணியை நியமித்தார். மக்களுக்குள் சுயமரியாதை, சமத்துவம், சகோதரத்துவம் ஓங்கி வளரவேண்டும் என்று கடைசிவரை போராடிய பெரியாரின் கடைசி கூட்டம் 1973 டிசம்பர் 19 ஆம் தேதி சென்னை தியாகராஜர் நகரில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் ‘சாதிமுறையையும், இழிவுநிலையையும் ஒழித்துக்கட்ட திராவிடர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபடவேண்டும்’ என்று முழக்கமிட்டு தன்னுடைய கடைசி உரையை முடித்துக்கொண்டார்.
புனைபெயர்கள்:
இவருடைய சமுதாய பங்களிப்பைப் பாராட்டி ‘யுனஸ்கோ நிறுவனம்’ ஜூன் 27, 1973 ஆம் ஆண்டு பெரியாரை ‘புத்துலக தொலைநோக்காளர்’, ‘தென்னிந்தியாவின் சாக்ரட்டிஸ்’, ‘சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை’ என பாராட்டி விருது வழங்கியது. அறியாமை, மூடநம்பிக்கை, அர்த்தமற்ற சம்பிரதாயங்கள், மட்டமான பழக்கவழக்கங்கள் ஆகியவற்றின் ‘கடும் எதிரி’, ‘பகுத்தறிவு பகலவன்’, ‘வைக்கம் வீரர்’ மற்றும் ‘தந்தை பெரியார்’ என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறார்.
இறப்பு:
‘பகுத்தறிவின் சிற்பி’,‘அறிவு பூட்டின் திறவுகோல்’, எதையும் ‘ஏன்? எதற்கு? எப்படி?’ என்று கேட்கவைத்தவர், மூட நம்பிக்கையை ஒழித்துத் தன்னம்பிக்கையை விதைத்தவர், உலகின் மாபெரும் சுயசிந்தனையாளரும், அழியாத வரலாற்றின் அறிஞருமான தந்தை பெரியார், டிசம்பர் 24, 1973 ஆம் ஆண்டு தனது 94 வது வயதில் காலமானார்.
பல நூற்றாண்டு கால வரலாற்றை வெறும் இருபது வருடங்களில் நிகழ்த்திக்காட்டிய வரலாற்றுத் தேடல்; மனிதகுல வரலாற்றில் தன் மக்களின் விடியலுக்காகப் போராடிய மாபெரும் விரர்; இந்திய விடுதலையில் பங்காற்றி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராயிருந்து, மதுவிலக்குக் கொள்கைகளை காந்திக்கு எடுத்துரைத்து, சுயமரியாதை இயக்கம் கட்டமைத்து, சீர்திருத்த திருமணம் என்ற ஒரு புதிய வாழ்க்கை ஒப்பந்த முறையை சட்டமாக்கி, தன் தமிழினம் தலைநிமிர்ந்து வாழ வகைசெய்த பகுத்தறிவு பகலவன், திராவிடம் என்கிற பல நூற்றாண்டு கால வரலாற்றின் ‘வெற்றி நாயகன்’ என இன்னும் சொல்லிக்கொண்டே போகக்கூடிய அரும்பணியை ஆற்றிய மாபெரும் சிந்தனையாளர் ‘பெரியார்’.
மகாத்மா காந்தி வரலாறு
பிறப்பு : 02-10-1869
இறப்பு : 30/01/1948
பெற்றோர் : கரம்சந்த் உத்தம்சந்த் காந்தி, புத்திலிபாய்
இடம் : போர்பந்தர், குஜராத்
வகித்த பதவி : விடுதலை போராட்ட வீரர்
வரலாறு:-மகாத்மா காந்தி!!
👉 மகாத்மா காந்தி அவர்கள், 1869ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 02ஆம் தேதி, குஜராத் மாநிலத்திலுள்ள 'போர்பந்தர்' என்ற இடத்தில் கரம்சாந்த் காந்திக்கும், புத்திலிபாய்க்கும் மகனாக பிறந்தார். காந்தியின் இயற்பெயர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என்பதாகும். இவருடைய தாய்மொழி குஜராத்தி ஆகும். மேலும் இவருடைய தந்தை கரம்சாந்த் காந்தி, போர்பந்தரில் ஒரு திவானாக பணியாற்றி வந்தார்.
ஆரம்பக்கல்வி மற்றும் திருமண வாழ்க்கை :
👉 மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்கள், பள்ளியில் படிக்கும்போதே நேர்மையான மாணவனாக விளங்கினார். பள்ளிப்படிப்பில் ஒரு சுமாரான மாணவனாகவே காணப்பட்டார் காந்தி.
👉 காந்தி தனது 13ஆம் வயதில் கஸ்தூரிபாயை மணந்தார். இவர்களுக்கு நான்கு ஆண் குழந்தைகள் பிறந்தனர்.
👉 ஹரிலால் (1888)
👉 மணிலால் (1892)
👉 ராம்தாஸ் (1897)
👉 தேவதாஸ் (1900)
👉 மோகனதாஸ் கரம்சந்த் காந்தி, தனது 16வது வயதில் தந்தையை இழந்தார்.
👉 தனது 18ஆம் வயதில் பள்ளிப்படிப்பு முடிந்த பிறகு பாரிஸ்டர் (barrister) எனப்படும் வழக்கறிஞர் படிப்பிற்காக காந்தி இங்கிலாந்து சென்றார். தன் படிப்பை வெற்றிகரமாக முடித்து தாயகம் திரும்பிய காந்தி பம்பாயில் சிறிது காலம் வழக்கறிஞராக பணியாற்றினார்.
👉 இது வெற்றிகரமாக அமையாததால் தன் அண்ணன் இருப்பிடமான ராஜ்கோட்டிற்கு சென்ற காந்தி, அங்குள்ள நீதிமன்றத்தில் வழக்காட வருபவர்களின் படிவங்களை நிரப்பும் எளிய பணியில் ஈடுபட்டார்.
👉 ஆனால், அங்கிருந்த ஆங்கிலேய அதிகாரியிடம் ஏற்பட்ட சிறிய தகராறால் இவ்வேலையும் பறிபோனது.
காந்தியின் தென்னாப்பிரிக்க அனுபவம் :
👉 பம்பாய் மற்றும் ராஜ்கோட்டில் சிறிதுகாலம் பணியாற்றிய மகாத்மா காந்தி, 1893ஆம் ஆண்டு ஒரு இந்திய நிறுவனத்தின் உதவியால் தென்னாப்பிரிக்காவில் பணிபுரிய பயணமானார்.
👉 அந்தசமயம் தென்னாப்பிரிக்காவில் ஆங்கிலேயர் ஆட்சியில் நிறவெறியும், இனப்பாகுபாடும் மிகுந்து இருந்தது. அன்றுவரை அரசியல் ஈடுபாடின்றி இருந்த காந்தியின் மனதில் அந்த பயணம் அவருக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல், பின்னாளில் அவரை ஒரு மாபெரும் அரசியல் சக்தியாகவும் மாற்றியது.
👉 டர்பன் நகரில் உள்ள நீதிமன்றத்தில் ஒருநாள் இந்திய வழக்கப்படி தலைப்பாகை அணிந்து வழக்காடச் சென்ற காந்தியிடம் அத்தலைப்பாகையை விலக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
👉 காந்தியோ உத்தரவை எதிர்க்கும் பொருட்டு நீதிமன்றத்தை விட்டு உடனே வெளியேறினார். பிறகு ஒருநாள் பிரிட்டோரியா செல்வதற்காக தகுந்த பயணச்சீட்டுடன் ரயிலில் முதல் வகுப்பு பெட்டியில் பயணம் செய்தார். அவர் ஒரு வெள்ளையர் இல்லை என்ற காரணத்திற்காக, ஆங்கிலேய அதிகாரி ஒருவரால் ரயில் பெட்டியிலிருந்து தூக்கி எறியப்பட்டார்.
👉 வெள்ளையர் அல்லாத ஒரே காரணத்தால் இதுபோன்று பல இன்னல்களை காந்தி அனுபவித்தார். இதன்மூலம் தென்னாப்பிரிக்காவின் கறுப்பின மக்களும், அங்கே குடியேறிய இந்தியர்களும் படும் இன்னல்களை காந்தி நன்கு உணர்ந்தார்.
👉 தனது ஒப்பந்தக்காலம் முடிவடைந்து இந்தியா திரும்ப காந்தி தயாரானபோது, அங்குள்ள இந்தியரின் வாக்குரிமையை பறிக்கும் தீர்மானத்தை இயற்ற இருப்பதாக செய்தித்தாளில் படித்தறிந்தார்.
👉 இதை எதிர்க்குமாறு காந்தி அவரது இந்திய நண்பர்களிடம் அறிவுறுத்தினார். அவர்களோ, தங்களிடம் இதற்கு தேவையான சட்ட அறிவு இல்லையென கூறி காந்தியின் உதவியை நாடினர்.
👉 காந்தியும் அவர்கள் வேண்டுகோளுக்கு இணங்கி, தன் தாயகம் திரும்பும் முடிவை மாற்றிக்கொண்டு இத்தீர்மானத்தை எதிர்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டார். இதன்மூலம் அங்குள்ள இந்தியர்களிடம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
👉 மகாத்மா காந்தி, 1894ஆம் ஆண்டு நாட்டல் இந்திய காங்கிரஸ் என்ற பெயரில் கட்சி தொடங்கி அதற்கு அவரே பொறுப்பாளரானார். இதன்மூலம் நாட்டல் மாகாணத்திலிருந்த இந்தியர் அனைவரையும் ஒன்று திரட்டி, அவர்களை தங்கள் உரிமைக்காக குரலெழுப்ப ஊக்கப்படுத்தினார்.
👉 1906ஆம் ஆண்டு ஜோகன்னஸ்பேர்க் நகரில் நடந்த ஒரு போராட்டத்தில் முதன்முறையாக சத்தியாகிரகம் எனப்படும் அறவழி போராட்டத்தை பயன்படுத்தினார். அகிம்சை, ஒத்துழையாமை, கொடுக்கப்படும் தண்டனையை ஏற்றல் ஆகிய கொள்கைகள் இவ்வறவழி போராட்டத்தின் பண்புகளாகும்.
👉 இந்த காலக்கட்டத்தில் காந்தியும் அவருடன் சேர்ந்து போராடியவர்களும் பலமுறை சிறை சென்றனர். தொடக்கத்தில் ஆங்கில அரசாங்கம் இவர்களை எளிதாக அடக்கியது போல் தோன்றியது.
👉 பின்னர் பொதுமக்களும், ஆங்கில அரசாங்கமும் இவர்களின் உண்மையான மற்றும் நேர்மையான வாதங்களை புரிந்துகொண்டு இவர்களுடைய கோரிக்கைகளை ஏற்கும் நிலை ஏற்பட்டது. இவ்வாறு தனது அறவழி போராட்டத்தின் மூலம் தென்னாப்பிரிக்க வாழ் இந்தியரின் சமூக நிலையை மேம்படுத்தும் முயற்சியில் வெற்றி கண்ட காந்தி தாயகம் திரும்பினார்.
👉 1915ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி மும்பை துறைமுகத்தில் காந்தி இறங்கியபோது உடையில் அடியோடு உருமாறியிருந்தார். தழையத் தழையக் கட்டிய மில் வேட்டி, தொள தொள ஜிப்பா, அங்கவஸ்திரம், தலையில் பெரிய முண்டாசு போன்றவற்றை துறந்து ஒரு விவசாயி உடையில் காட்சியளித்தார்.
👉 அப்பல்லோ பந்தர் துறைமுகத்தில் இறங்கிய காந்தி - கஸ்தூரிபா தம்பதி வெளியே வந்தபோது ஒரு கோலாகல வரவேற்பளிக்க, மிதவாத அரசியல் தலைவர் கோபாலகிருஷ்ண கோகலே ஏற்பாடு செய்திருந்தார்.
👉 மேல் விரிப்பு திறந்த மோட்டார் காரில் காந்தியையும், அவரது மனைவியையும் அமரச் செய்து ஊர்வலமாக இட்டுச் சென்றார். (காந்தி தாயகம் திரும்பிய நாளை அடிப்படையாகக் கொண்டு ஜனவரி 9ஆம் தேதியை வெளிநாடு வாழ் இந்தியர் தினமாக 2002ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டது.)
இந்திய விடுதலை போராட்டத்தில் காந்தி :
👉 தென்னாப்பிரிக்காவில் காந்தி தலைமையேற்று நடத்திய போராட்டங்களை பற்றி இந்திய மக்கள் அறிந்திருந்தனர். காந்திக்கு, கோபால கிருஷ்ண கோகலே, ரவீந்திரநாத் தாகூர் போன்றோருடன் நட்பு ஏற்பட்டது.
👉 காந்தி இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்து ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலை போராட்டத்தில் முழு வீச்சில் ஈடுபட்டார்.
👉 இதன்மூலம் இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கத்தின் தலைவராக காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார். தலைமையேற்றவுடன் காங்கிரசில் பல மாற்றங்களை அறிமுகப்படுத்தி இயக்கத்திற்கு புத்துயிர் ஊட்டினார்.
👉 அறப்போராட்ட வழிமுறைகளையும், சுதேசி போன்ற கொள்கைகளையும் வலியுறுத்தி காங்கிரஸ் இயக்கத்தை இந்தியாவின் மாபெரும் விடுதலை இயக்கமாக்கினார்.
ஒத்துழையாமை இயக்கம் :
👉 ரவ்லத் சட்டம் மற்றும் ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு குரல் கொடுக்கவும், இந்திய அரசு சட்டத்தில் இந்தியருக்கு வழங்கப்பட்டிருந்த குறைவான அதிகாரங்களை ஏற்க மறுத்தலை வெளிக்காட்டவும், காந்தி ஒத்துழையாமை இயக்கத்தினை 1920ஆம் ஆண்டு தொடங்கினார்.
👉 ஆங்கில அரசிடமிருந்து பெற்ற பதவிகளையும், பட்டங்களையும், விருதுகளையும் துறத்தல்,
👉 வேலைநிறுத்தம், அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் சட்டமன்ற நடவடிக்கைகள் அனைத்தையும் புறக்கணித்தல்,
👉 வரி செலுத்துவதை மறுத்தல் போன்ற கருத்துக்கள் ஒத்துழையாமை இயக்கத்தில் வலியுறுத்தப்பட்டன.
👉 இளையத் தலைமுறை மற்றும் தேசியவாதிகளிடையே இந்த இயக்கம் பெரும் ஆதரவைப் பெற்றது மட்டுமல்லாமல், ஒத்துழையாமை இயக்கத்தின் வெற்றியால், காந்தி இந்திய தேசிய காங்கிரஸின் தனிப்பெரும் தலைவராக உருவெடுத்தார்.
👉 1922ல் உத்திரப் பிரதேசத்தில் சௌரி சௌரா என்ற இடத்தில் விடுதலை இயக்கத்தினருக்கும், காவல்துறையினருக்கும் மோதல்கள் ஏற்பட்டன.
👉 காவல்துறையினரின் செயல்பாட்டால் சில விடுதலை இயக்கத்தினர் மரணமடைந்தனர். இதனால் கோபம் கொண்ட மற்றவர்கள் காவல்நிலையத்தை தீயிட்டு கொளுத்தினர். இதில் 22 காவல்துறையினர் கொல்லப்பட்டனர். இதனால் வன்முறை இந்தியாவின் வேறு சில பகுதிகளுக்கும் பரவியது.
👉 அறவழியில் நடந்து வந்த இயக்கம் வன்முறை பாதையில் செல்வதை கண்ட காந்தி அதிர்ச்சியடைந்தார். ஒத்துழையாமை இயக்கம் வன்முறை இயக்கமாக மாறுவதை தடுக்க, அதனை நிறுத்தி கொள்வதாக அறிவித்தார். வன்முறை ஓயும் வரை மூன்று வாரங்கள் உண்ணாநிலை போராட்டமொன்றை நடத்தினார். இதனால் ஒத்துழையாமை இயக்கம் வலுவிழந்து நின்று போனது.
👉 வன்முறையை தடுக்க காந்தி பாடுபட்டாலும், அரசு அவர் மீது ஆட்சி விரோத எழுத்துக்களை வெளியிட்டார் என்று குற்றம் சாட்டி ஆறாண்டுகள் சிறையில் அடைத்தது. இதையடுத்து இரண்டே ஆண்டுகளில் காந்தி விடுதலை ஆனார்.
காந்தியின் தண்டி யாத்திரை :
👉 1930ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு, இந்தியாவில் தயாரிக்கப்படும் உப்புக்கு வரி விதித்தது. மேலும், இந்தியாவில் தயாரிக்கப்படும் உப்பை பிரிட்டிஷ் அரசாங்கத்தை தவிர வேறு யாரும் விற்கக்கூடாது என்ற சட்டத்தையும் இயற்றியது. இதை விலக்கிக் கொள்ளுமாறு காந்தி பிரிட்டிஷாரிடம் விடுத்த கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது.
👉 இதனை ஏற்க மறுத்த காந்தியடிகள், 'தன்னுடைய நாட்டில் விளைந்த பொருளுக்கு அன்னியர் வரி விதிப்பதா?' எனக் கருதி, சத்தியாகிரக முறையில் இதை எதிர்க்க முடிவு செய்தார்.
👉 1930ஆம் ஆண்டு மார்ச் 12ஆம் தேதி குஜராத்தின் தண்டியில், ஆங்கிலேயரின் எதிர்ப்பையும் தாண்டி உப்பு எடுப்பதற்காக இந்த நடைபயணம் துவங்கியது. சபர்மதி ஆசிரமத்திலிருந்து 240 மைல் தூரத்திலுள்ள தண்டிக்கு மகாத்மா காந்தி வழிநடத்திய இந்தப் பயணம் 23 நாட்கள் நீடித்தது. 4 மாவட்டங்கள் மற்றும் 48 கிராமங்கள் வழியே கடந்து சென்றது இப்பயணம்.
👉 காந்தியின் சபர்மதி ஆசிரமத்தில் இருந்த 78 சத்தியாகிரகிகளுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பயணம் நிறைவுபெறும்போது சுமார் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்டவர்களை உள்ளடக்கியிருந்தது.
👉 இறுதியில் தண்டியை வந்தடைந்த அவர், அங்கிருந்த கடல் நீரில் உப்பு காய்ச்சி ஆங்கில சட்டத்திற்கு எதிராக அதை விநியோகித்தார். இந்த நிகழ்வு இந்தியாவில் பல இடங்களில் பரவியது மட்டுமல்லாமல், போராட்டம் தீவிரம் அடைந்து காந்தி உட்பட பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
👉 ஆனால், போராட்டம் தீவிரம் அடைவதைக் கண்ட ஆங்கில அரசு, வேறு வழியில்லாமல் காந்தியுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்கள் விதித்த உப்புவரியை திரும்பப் பெற்று கொண்டனர். 'உப்பு சத்தியாகிரகம்' என்ற இந்நிகழ்வு இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது என கூறலாம்.
வெள்ளையனே வெளியேறு இயக்கம் :
👉 1942ஆம் ஆண்டு மகாத்மா காந்தி, மும்பையில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில், 'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தை தொடங்கினார்.
👉 இது 'ஆகஸ்ட் புரட்சி' எனவும் அழைக்கப்பட்டது. சுதந்திரத்தை லட்சியமாக கொண்டு, ஒத்துழையாமை இயக்கம் முன்னிலைப்படுத்தப்பட்டது. அறவழியில் போராட வேண்டும் என்பதை காந்தி வலியுறுத்தினார்.
👉 'செய் அல்லது செத்து மடி' என்ற தாரக மந்திரத்தை உணர்ச்சி பொங்க காந்தி முழங்கினார். அதற்கு அடுத்த நாளே காந்தி, நேரு போன்ற தேசத் தலைவர்கள் பலரும் சிறையில் அடைக்கப்பட்டனர். அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டி தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவிக்கப்பட்டது. பொதுக் கூட்டங்களுக்கும் தடை விதிக்கப்பட்டது.
👉 இதனால் வெள்ளையரை எதிர்த்து நாடெங்கும் கிளர்ச்சிகள் நடைபெற்றன. 1,00,000 நபர்களுக்கு மேல் சிறையில் அடைக்கப்பட்டனர். சுதந்திரத்திற்காக இந்தியர்களை ஒரே அணியில் திரள வைத்த பெருமை வெள்ளையனே வெளியேறு இயக்கத்தையே சேரும்.
👉 காந்தியின் மன உறுதியையும், அகிம்சை பலத்தையும் கண்டு ஆங்கில அரசு திகைத்தது. இறுதியில் காந்தியின் இடைவிடாத போராட்டத்தால், இந்தியாவிற்கு சுதந்திரம் அளிக்க பிரித்தானிய அரசு முன்வந்தது. ஆனால் அதற்கு பின் காந்திக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.
இந்தியா - பாகிஸ்தான் பிரிவினை :
👉 இந்தியாவில் எங்களுக்கு நியாயம் கிடைக்காது என்பதால் எங்களுக்கு தனிநாடு வேண்டும் என்று வாதிட்டது முஸ்லிம்களின் பிரதிநிதியான முஸ்லிம் லீக் கட்சி.
👉 காந்திக்கு இதில் துளிகூட சம்மதமில்லை. ஆனால் நேருவும், பட்டேலும் வேறு வழியில்லை என்று கூறினர். எனவே காந்தியை வேதனையில் மூழ்கடித்துவிட்டு பாரதத்தை இந்தியா, பாகிஸ்தான் என்று இரண்டாகப் பிரிக்க முடிவெடுக்கப்பட்டது.
👉 பல போராட்டங்களுக்குப் பின் ஒரு வழியாக 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தது. டெல்லி செங்கோட்டையில் பீரங்கிகள் முழங்க பல தலைவர்களும், மக்களும் அணி திரண்டு மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்தனர். தங்கள் சுதந்திர தாகம் தீர்ந்ததை எண்ணி குதூகளித்தனர்.
👉 ஆனால் அந்த சுதந்திரத்திற்கு எவர் அடிப்படை காரணமாக விளங்கினாரோ அவர் அந்தக்கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.
👉 சுதந்திரம் கிடைத்த மகிழ்ச்சியைவிட நாடு இரண்டாக பிளவுபட்டதை எண்ணிக் கலங்கிய காந்தியடிகள் அன்றைய தினம் டெல்லியைவிட்டு வெகுதொலைவில் உள்ள கல்கத்தாவில் உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்தார். தன் கடைசி மூச்சுவரை அந்த பிரிவினையால் துயருற்றியிருந்தார் காந்தியடிகள்.
👉 காந்தியடிகள் அஞ்சியதுபோலவே இந்தியாவும், பாகிஸ்தானும் சுதந்திரம் அடைந்த ஒருசில தினங்களுக்குள்ளாகவே இந்தியாவிலிருந்து லட்சக்கணக்கான முஸ்லிம்கள் பாகிஸ்தானுக்கும், பாகிஸ்தானிலிருந்து லட்சக்கணக்கான இந்துக்கள் இந்தியாவிற்கும் இடம் பெயர்ந்தனர்.
👉 தன் வாழ்நாள் முழுவதும் இந்து - முஸ்லிம் ஒற்றுமையையும், ஒன்றுபட்ட சுதந்திர இந்தியாவையுமே கற்பனை செய்து வந்த காந்தியடிகள் ஒடிந்துபோனார். கசப்புணர்வு மேம்பட்டிருந்தாலும் அப்போதும்கூட அவர் எல்லாவற்றையும் வெறுத்து ஒதுக்கிவிட்டு ஒதுங்கிவிடவில்லை. மதக்கலவரத்தால் துவண்டு போயிருந்த மக்களுக்கு ஆறுதலும், அமைதியும் கூற 'நவக்காளி' யாத்திரை மேற்கொண்டார்.
காந்தியின் மரணம் :
👉 1948ஆம் ஆண்டு ஜனவரி 30ஆம் தேதி புதுதில்லியில் ஒரு பிரார்த்தனை கூட்டத்தில் கலந்துகொள்ள வந்திருந்தார் காந்தியடிகள்.
👉 சரியாக 10 நாட்களுக்கு முன்னர் அதேபோன்ற ஒரு பிரார்த்தனை கூட்டத்தில் கலந்து கொண்டபோது ஓர் இளைஞன் காந்தியடிகளை நோக்கி குண்டு வீசினான். அதில் காயமின்றி தப்பிய காந்தியடிகள் அந்த இளைஞனை மன்னித்து விடுமாறு கூறி, போலீஸார் வழங்க முன்வந்த கூடுதல் பாதுகாப்பையும் நிராகரித்துவிட்டார்.
👉 உயிருக்கு ஆபத்து என்று தெரிந்திருந்தும் ஜனவரி 30ஆம் தேதி இன்னொரு பிரார்த்தனை கூட்டத்தில் கலந்து கொண்டார்.
👉 அப்போது எதிர்பாராத விதமாக கைக்கூப்பியிருந்த காந்தியடிகளை நோக்கி மூன்று குண்டுகள் பாய்ந்தது. அதன்பின் கைகள் கூப்பிய நிலையில் 'ஹேராம்... ஹேராம்' என்ற வார்த்தைகளை உதிர்த்தவாறு இந்திய நேரப்படி மாலை சுமார் 5 மணிக்கு தேசப்பிதாவின் உயிர் பிரிந்தது.
👉 ஆங்கில ஆட்சிக்கு எதிராகவும், இந்திய விடுதலைக்காகவும் அந்நியப் பொருட்கள் புறக்கணிப்பு, உப்பு சத்தியாகிரகம், வரி கொடா இயக்கம், ஒத்துழையாமை இயக்கம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் என பலப் போராட்டங்களை அறவழியில் முன்னெடுத்து நடத்தி வெள்ளையர்களை திகைக்கச் செய்தவர். பாரத நாட்டிற்காக தன்னுடைய உயிரையும் காணிக்கையாக்கிய மகாத்மாவின் வாழ்க்கை வரலாறு உலக சரித்திரத்தில் எழுதப்பட்ட அழியா சுவடுகள் ஆகும்.
காந்திஜி பற்றிய தகவல்கள் :
👉 முதன்முதலில் 'தேசத்தந்தை' என்று காந்தியை அழைத்தவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், 'மகாத்மா' என்று அழைத்தவர் ரவீந்திரநாத் தாகூர்!
👉 காந்தி தொடங்கிய 'இந்தியன் ஒப்பீனியன்' குஜராத்தி, இந்தி, தமிழ் மற்றும் ஆங்கிலம் என நான்கு மொழிகளில் வெளியானது.
👉 தாழ்த்தப்பட்ட மக்களுக்கு காந்தி வைத்த பெயர்தான் 'ஹரிஜன்' என்பது, அதன் பொருள் 'கடவுளின் குழந்தைகள்' என்பதாகும்.
👉 'உடற்பயிற்சியின் அரசன் நடைப்பயிற்சி' என்று சொன்ன காந்தி, லண்டனில் சட்டம் பயிலும்போது ஒரு நாளைக்கு 10 மைல்கள் நடந்தே சென்று பணத்தை மிச்சப்படுத்தி படித்தார்.
👉 காந்தி துறவியை போன்றவர். ஆனால், அவரிடம் நகைச்சுவை உணர்வுக்கு பஞ்சமே இருந்தது இல்லை. ஒருமுறை லண்டனுக்கு சென்றபோது, பிரிட்டிஷ் அரசரை முதலும் கடைசியுமாக சந்தித்தார் காந்தி.
👉 ஆறாம் ஜார்ஜ் மன்னரை சந்தித்துவிட்டு பக்கிங்ஹாம் அரண்மனையைவிட்டு அவர் வெளியில் வந்தபோது, அவரைப் பத்திரிக்கையாளர்கள் சூழ்ந்துகொண்டனர். அதில் ஒருவர், 'இவ்வளவு குறைவான ஆடையுடன் வந்திருக்கிறீர்களே குளிரவில்லையா' என்று கேட்டார். அதற்கு காந்தி 'எங்கள் இருவருக்கும் தேவையான அளவு ஆடைகளையும் சேர்த்து மன்னரே அணிந்திருந்தார்' என்று பதில் அளித்தாராம்.
👉 வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின்போது, காந்தி சொன்ன வாக்கியம்தான்..... 'செய் அல்லது செத்து மடி!'
👉 கொள்கை இல்லாத அரசியல், வேலை செய்யாமல் வரும் செல்வம், மனசாட்சியை ஏமாற்றி வரும் இன்பம், பண்பு இல்லாத அறிவு, நியாயம் இல்லாத வணிகம், மனிதம் மறந்த அறிவியல், தியாகம் இல்லாத வழிபாடு இவை காந்தி குறிப்பிட்ட ஏழு சமூக பாவச் செயல்கள்.
👉 தபால் அட்டைகள்தான் உலகத்திலேயே மிகவும் சிக்கனமான தகவல் தொடர்பு சாதனம் என்று கருதியவர் காந்தி.
👉 கடிதங்கள் மிக நேர்த்தியாக மடிக்கப்பட்ட பின்பே உறையில் இட வேண்டும் என்பதில் உறுதியுடன் இருப்பார். காரணம், கடிதம் மடிக்கப்பட்டு இருக்கும் முறையிலேயே உங்களைப்பற்றிய அபிப்ராயம் தோன்றிவிடும் என்பார்.
👉 யாருக்குக் கடிதம் எழுதினாலும் 'தங்களின் கீழ்ப்படிந்த சேவகன்' என்று எழுதியே கடிதத்தை முடிப்பார்.
👉 கிழிந்த துணிகளைத் தானே தைத்துக்கொள்வார். எவ்வளவுதான் வறுமையில் ஒருவர் இருந்தாலும், உடுத்துகின்ற உடைகள் மிகத் தூய்மையாக இருக்க வேண்டும் என்பார். அதை அவரும் கடைபிடித்தார்.
👉 காந்திஜி ஒவ்வொரு இரவும் நாட்குறிப்பு எழுதும் பழக்கம் கொண்டவராக இருந்தார். அதுதான் பின்னாளில் அவரின் சுயசரிதையாகவும் மலர்ந்தது.
👉 'சட்ட மறுப்பு இயக்க போராட்டத்தை கைவிடுங்கள்' என்று வெள்ளையர்கள் சொன்னபோது, அதற்கு காந்தி, தன் 11 அம்சத் திட்டத்தை ஏற்றுக்கொண்டால், போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்தார். அதில் 11வதாக இருந்த திட்டம், 'சுய பாதுகாப்புக்கு தேவையான வெடி பொருட்களையும், ஆயுதங்களையும் தயாரித்து கொள்வதற்கான உரிமம் வழங்குதல் ஆகும்.' அகிம்சையை போதித்தவருக்குள் எப்படி இந்த எண்ணம் உதித்தது என்பது இன்று வரை பலரின் கேள்வி.
👉 எந்த நிலையிலும் ஆங்கிலேயரை உடல் அளவில் காயப்படுத்துவதை அவர் அனுமதிக்கவில்லை. 'நாம் அவர்களை எதிர்த்து போராடவில்லை. அவர்கள் நம்மீது திணிக்கும் அதிகாரத்தைத்தான் எதிர்க்கிறோம்' என்று அதற்கு விளக்கம் அளித்தார்.
👉 தான் தவறு செய்தால், அதற்காக மௌன விரதம் ஏற்பதும்... பிறர் தவறு செய்தால், அந்த தவறு செய்தவர் அதை உணர தான் உண்ணாவிரதம் இருப்பதையும் வாடிக்கையாக கொண்டிருந்தார் மகாத்மா காந்தி.
👉 ஆரம்ப காலங்களில், ஆசிரமத்தில் நடக்கும் தினசரி பிரார்த்தனை கூட்டங்களில், 'கடவுள் உண்மையானவர்!' என்று சொல்லி வந்தார். விடுதலை போராட்டம் உச்சத்தில் இருந்தபோது, 'உண்மையே கடவுள்' என்று மாற்றிக்கொண்டார்.
👉 'என்னிடம் சீடனாக வந்து சேர்ந்த குரு' என்று காந்தி அழைத்தது வினோபாபாவேவைத்தான்.
👉 இந்தியா சுகந்திரம் அடைந்தபோது, அதைக் கொண்டாட மறுத்தவர்கள் இரண்டு பேர். ஒருவர் காந்தி, இன்னொருவர் தந்தை பெரியார்.
Myilsami Annathurai was born on Monday, July 2, 1958, in the village of Kothavadi, Pollachi taluka, Coimbatore district, to Mr. Myilsami, a teacher and Mrs. Balasaraswathi.
Name: Myilsami Annathurai Born: 02-07-1958 Parents: Myilsami, mother of Balasaraswati Location: Pollachi, Coimbatore, Tamil Nadu ...
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjduBgAE3aOWbCxroKh_4l1qKR2XAdrSaIuBLnJ4VlifnvTBZw1ZKltmUyfZWF0evUTq2RYC3oTvqg3vNyHK8ypP9zhTH-HsJ-z-jmJ3oiy2qEIfcCfqgF1pessTGNvouvDUb2h89zVNdE/s1600/1613363715188705-0.png)
-
Name: Marconi Natural name: Guillermo Marconi Born: 25-04-1874 Death: 20/07/1937 Parents: Kaisab Marconi, Anne Jameson Location...
-
Cake is a favorite pastime of children and adults in today's modern age. It is widely used primarily for celebrations such as ...