பெயர் : கல்பனா சாவ்லா
பிறப்பு : 17.03.1962 சான்றிதழில் 01.07.1961
இறப்பு : 01.02.2003
பெற்றோர் : பனாரஸ் லால் சாவ்லா, சன்யோகிதா தேவி
இடம் : கர்னல், ஹரியானா
வகித்த பதவி : விண்வெளி வீராங்கனை
விருதுகள் : Congressional Space Medal of Honor, NASA Space Flight Medal, NASA Distinguished Service Medal
வரலாறு:-கல்பனா சாவ்லா
🕵 இந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா 1962ஆம் ஆண்டு மார்ச் 17ஆம் தேதி ஹரியானா மாநிலத்தில் உள்ள கர்னல் என்ற நகரத்தில் பிறந்தார். இவருடைய பள்ளி சான்றிதழ்களில் 1961ஆம் ஆண்டு, ஜூலை 1ஆம் தேதி பிறந்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
🕵 இவர் பனாரஸ் லால் சாவ்லாவுக்கும், சன்யோகிதா தேவிக்கும் மகளாக பஞ்சாபி குடும்பத்தில் பிறந்தார். இவருக்கு சுனிதா மற்றும் தீபா என்ற இரண்டு சகோதரிகளும், சஞ்சய் என்ற சகோதரனும் இருந்தனர். கல்பனாவே இக்குடும்பத்தின் கடைக்குட்டி ஆவார். சமஸ்கிருதத்தில் கல்பனா என்றால் "கற்பனை" என்று பொருள்.
🕵கல்பனா சாவ்லா சிறுவயது முதலே தலைக்கு மேலே விமானம் பறப்பதை ரசித்துக்கொண்டே இருப்பார். ஒருமுறை கல்பனா சாவ்லா தனது தந்தையிடம், ஃபிளையிங் கிளப்புக்கு (flying club) அழைத்து செல்லும்படி கேட்டார். ஃபிளையிங் கிளப்பில் கல்பனா சாவ்லா விமானத்தை வியந்து பார்ப்பார். மேலும், விமானத்தில் பயணம் செய்தார். அதற்குப் பிறகு விமானம் மீதான காதல் கல்பனா சாவ்லாவிடம் மேலும் அதிகரித்தது.
கல்வி :
🕵 இவர் தனது தொடக்க கல்வியை கர்னலில் உள்ள தாகூர் பள்ளியில் தொடங்கினார். இந்தியாவின் தலைச்சிறந்த விமான ஓட்டியும், தொழில் அதிபருமான ஜெ.ஆர்.டி.டாடாவை பார்த்ததிலிருந்து கல்பனா சாவ்லாவிற்கு விமானம் ஓட்டும் ஆர்வம் ஏற்பட்டது.
🕵 பள்ளி பருவத்திலேயே தான் ஒரு விமானியாக வேண்டும் என்ற லட்சியத்தை வளர்த்துக்கொண்டார். பள்ளியில் முதல்நிலை மாணவியாக திகழ்ந்த கல்பனா சாவ்லா எதிர்காலத்தில் விண்வெளி பொறியாளராக ஆக வேண்டும் என்று விரும்பினார். அதற்காக ஆராய்ச்சியாளர்கள், சாதனையாளர்களின் வாழ்க்கை வரலாறுகளை விரும்பி படித்தார்.
🕵கல்பனாவின் விருப்பத்திற்கு அவரது பெற்றோர்கள் தடைவிதித்தனர். காரணம் அப்போதைய காலத்தில் விமான பொறியியல் என்பது ஆண்கள் மட்டுமே கற்கும் ஒரு பிரிவாக இருந்தது. துணிந்து அந்த பிரிவை தேர்தெடுத்த கல்பனாவின் பிடிவாதம் பெற்றோரை சம்மதிக்க வைத்தது.
🕵 1982ஆம் ஆண்டு சண்டிகரில் உள்ள "பஞ்சாப் பொறியியல் கல்லூரியில்" விமானப் பொறியியலில் துறையில் கல்வி பயின்று இளங்கலை பட்டமும் பெற்றார். அதன்பின் பல்வேறு தடைகளை தாண்டி மேற்படிப்புக்கு அமெரிக்கா சென்றார்.
🕵 ஆகாயத்தை பற்றியே கனவு கண்டுகொண்டிருந்த கல்பனா சாவ்லாவை அமெரிக்கா விரும்பி அழைத்தது. பின்னர், 1984ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள "டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில்" விண்வெளிப் பொறியியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றார்.
🕵 பின்னர், 1986-ல் கொலராடோ பல்கலைக்கழகத்தில் இரண்டாவது முதுகலைப் பட்டமும் பெற்றார். அங்கேயே தொடர்ந்து பயின்று 1988ஆம் ஆண்டு விண்வெளி பொறியியலில் முனைவர் பட்டத்தை பெற்றார்.
நாசாவில் பணி :
🕵 தனது கனவை நனவாக்கி கொள்ள கல்வித்துறையில் தொடர்ச்சியாக முன்னேறி கொண்டிருந்த கல்பனா சாவ்லாவிற்கு 1988ஆம் ஆண்டில் அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவில் ஆய்வு விஞ்ஞானியாக தொழில் வாய்ப்பு கிடைத்தது.
🕵 இலக்குகளை அடைவதற்காக தான் செல்லும் பாதை சரிதான் என்பதை உறுதிப்படுத்தி கொண்ட கல்பனா சாவ்லா அங்கே எளிய மொழியில் விளக்குவதற்கு கடினமான கம்பியூட்டேசினல் புலூயிட் டயினமிக்ஸ் (computational fluid dynamics) எனும் படிமுறை தீர்வு மற்றும் எண்சார் பகுப்பியல் வழிமுறைகள் மூலம் பாய்ம ஓட்டங்களை ஆராயும் பாய்ம இயக்கவியல் தொடர்பாகவும், செங்குத்தாக குறுகிய இடத்தில் புறப்படுதல் மற்றும் தரையிறங்கல் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டார்.
🕵 விமானம் மற்றும் கிளைடேர்களை (gliders) ஓட்டக் கற்றுக்கொடுக்க கல்பனா சாவ்லா தகுதி சான்றிதழ் பெற்றார். ஒன்று மற்றும் பல பொறிகள் பொருத்திய விமானங்கள், கடல் விமானங்கள் மற்றும் கிளைடேர்களையும் ஓட்ட அனுமதி பெற்றிருந்தார்.
🕵 1991ஆம் ஆண்டு அமெரிக்க குடியுரிமை கிடைத்ததும், நாசாவில் விண்வெளி வீரர்களுக்கான பயிற்சி விண்ணப்ப படிவத்தை அனுப்பி வைத்தார். தனது விண்ணப்பத்திற்கு பதில் கிடைக்க தாமதமானதால், 1993ஆம் ஆண்டு ஒரு தனியார் நிறுவனத்தில் ஆய்வு விஞ்ஞானியாக சேர்ந்தார்.
🕵 அதற்கு அடுத்த ஆண்டே கல்பனா சாவ்லாவின் விண்ணப்பத்திற்கு பதில் கிடைத்தது. நாசாவில் விண்வெளி வீரர் பயிற்சி பெறுவதற்கு விண்ணப்பத்திருந்த சுமார் 3,000 பேரில், ஆறு பேர் மட்டுமே தேர்வானார்கள். அவர்களுள் கல்பனா சாவ்லாவும் ஒருவர் என்ற பதில் கிடைத்தது. அன்று முதல் கல்பனா சாவ்லாவின் விண்வெளி வீரர் கனவு நனவாக தொடங்கியது.
🕵 ஜான்ஸன் விண்வெளி தளத்தில் பல்வேறு உடல் மருத்துவ பரிசோதனைகள், கடுமையான நேர்காணல்கள் ஆகியவற்றை கடந்து வெற்றிகரமாக தேர்ச்சி பட்டியலில் இடம்பிடித்தார் கல்பனா சாவ்லா.
முதல் விண்வெளி பயணம் :
🕵 1995ஆம் ஆண்டு பயிற்சிகள் முடிந்து விண்வெளி வீராங்கனையாக தகுதி பெற்ற கல்பனா சாவ்லா தனது முதல் விண்வெளி பயணத்தை 1997ஆம் ஆண்டு மேற்கொண்டார். ஆறு வீரர்களுடன் கொலம்பிய விண்வெளி ஊர்தியான எஸ்.டி.எஸ்-87-ல் பயணம் செய்வதற்கு தேர்வு செய்யப்பட்ட கல்பனா சாவ்லாவிற்கு அதில் ஆராய்ச்சி குறித்த முக்கிய பொறுப்புகளும் தரப்பட்டன.
🕵 திட்டமிட்டப்படி நவம்பர் 1997-ல் 19ஆம் தேதி கல்பனா சாவ்லாவுடன் சேர்த்து ஆறு வீரர்கள் கொண்ட குழு ஃப்ளோரிடாவில் கேப் கெனவரல் முனையிலிருந்து நெருப்பை உமிழ்ந்து கொண்டு விண்ணில் பாய்ந்தது எஸ்.டி.எஸ்-87 என்கின்ற விண்கலம்.
🕵கல்பனா சாவ்லா தனது முதல் பயணத்திலேயே 15 நாட்கள், 12 மணி நேரங்கள் விண்ணில் சுற்றினார். கிட்டத்தட்ட 372 மணி நேரத்திற்கு அதிகமாக 252 முறைகள் பூமியை சுற்றி கொண்டிருந்தார்.
🕵 10.5 மில்லியன் கிலோமீட்டர் தொலைவு பயணத்தில், தரையில் இருந்து கண்சிமிட்டாமல் பார்த்து ரசித்த நட்சத்திரக் கூட்டங்களையும், வானத்தையும் ஒருவித பெருமிதத்தோடு மிக அருகாமையில் சென்று பார்த்தார் கல்பனா சாவ்லா.
🕵கிட்டத்தட்ட 16 நாட்கள் பயணத்தின் இறுதியில் டிசம்பர் 5ஆம் தேதி வெற்றியோடும், பாதுகாப்பாகவும் பூமிக்கு திரும்பினர் அந்த 6 பேர் கொண்ட குழுவினர். இதன்மூலம் விண்வெளிக்கு சென்று வந்த முதல் இந்திய பெண்மணி என்ற பெருமையை பெற்றார் கல்பனா சாவ்லா.
கொலம்பியா விண்கலம் :
முதல் விண்வெளி பயணத்தை வெற்றிகரமாக முடித்த கல்பனா சாவ்லா, அடுத்த ஐந்து ஆண்டுகளில் தன்னுடைய இரண்டாவது பயணத்திற்கு தயாரானார். 2000 மற்றும் 2002ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளக்கூடிய இந்த பயணம் பலதரப்பட்ட தொழில்நுட்ப கோளாறுகளால் காலம் கடத்தப்பட்டது.
🕵 பின்னர், 2003ஆம் ஆண்டு ஜனவரி 16ஆம் தேதி விண்வெளி ஆராய்ச்சிக்காக, அமெரிக்காவின் கென்னடி நிலையத்திலிருந்து கொலம்பியா விண்கலம் எஸ்.டி.எஸ்-107 (STS-107) விண்ணிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த விண்கலத்தில் இந்திய வம்சாவளி பெண்ணாகிய கல்பனா சாவ்லா உள்ளிட்ட 7 பேர் பயணித்தனர்.
🕵விண்ணை நெருங்கி கொண்டிருந்த சமயத்தில் பாதுகாப்பு அமைப்பின் ஒரு பகுதி உடைந்து விண்கலத்தின் மீது வேகமாக மோதியது. இதனால் இறக்கையில் ஏற்பட்ட பெரிய துளையை சரி செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனாலும் அதை சரி செய்ய முடியவில்லை. இந்த தகவலை நாசாவிற்கு தெரிவித்தனர். ஆனால் குறைந்த நேரத்தில் வேறு ஒரு விண்கலத்தை அனுப்புவது என்பது சாத்தியமற்ற ஒன்றாக நாசாவிற்கு இருந்தது.
🕵 விண்கலத்தில் பாதிப்புகள் பெரியதாக இருந்தாலும்கூட விண்கலம் வெற்றிகரமாக விண்வெளியை அடைந்தது. புவியையும், விண்வெளியையும் கண்காணித்து 80 ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றுள் விண்வெளி வீரர்களுடைய ஆரோக்கியம், பாதுகாப்பு மற்றும் விண்வெளி தொழில்நுட்ப மேம்பாடு தொடர்பான பல்வேறு தரப்பட்ட பரிசோதனைகளையும் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
🕵 இந்திய வம்சாவளி பெண்ணாகிய கல்பனா சாவ்லா உள்ளிட்ட 7 பேர் பயணித்த கொலம்பியா விண்கலம் STS-107, திட்டமிட்டபடி 16 நாட்கள் (அதாவது 15 நாட்கள், 22 மணிநேரம், 20 நிமிடங்கள், 32 விநாடிகள்) விண்வெளியில் பயணம் செய்த பிறகு பூமிக்கு திரும்பும் நாளும் வந்தது. பிப்ரவரி 1ஆம் தேதி கொலம்பிய விண்கலம் தரையிறங்குவதை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தது நாசா. கென்னடி விண்வெளி மையத்தில் விண்கலம் வழக்கமாக தரையிறங்கும் வழிமுறைகள் பின்பற்றப்பட்டன.
🕵அன்று காலை 9 மணிக்கு சற்று முன்னதாக கட்டுப்பாட்டில் அசாதாரண சூழ்நிலைகள் தென்பட்டன. முதலில் விண்கலத்தின் இடதுபுற இறக்கைகளில் இருந்த உணர்கருவிகள் செயலிழந்தன. பின்னர் இடதுபுற சக்கரத்தில் காற்றழுத்தம் குறைந்து காணப்பட்டது.
🕵 அந்த நேரத்தில் கொலம்பிய விண்கலம் வளிமண்டலத்தை நெருங்கி கொண்டிருந்தது. ஒளியின் வேகத்தில் 18 மடங்கு அதிக வேகத்தில் தரையிலிருந்து 61கி.மீ வேகத்தில் தரையை நோக்கி வந்து கொண்டிருந்தது கொலம்பிய விண்கலம்.
🕵 அச்சமயம் விண்வெளி கட்டுப்பாட்டு மையத்திலிருந்து விண்கலத்தில் உள்ளவர்களுக்கு தொடர்பு கொள்ள பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், பலன் ஏதும் இல்லை. அதேசமயம் விண்கலம் வளிமண்டலத்திற்குள் நுழைந்தது.
🕵 வளிமண்டலத்தில் உள்ள வெப்பக்காற்றுகள் விண்கலத்தின் இடதுபுற இறக்கையின் துளைவழியாக நுழைய தொடங்கியது. இறுதியில் 1500 டிகிரி செல்சியஸ் அளிவிற்கு அதிகமான வெப்பக்காற்று துளையின் வழியாக சென்றதால் விண்கலம் கட்டுப்பாட்டை இழந்தது.
🕵 பூமியில் தரையிறங்குவதற்கு சரியாக 14 நிமிடங்களே இருந்த நிலையில் யாரும் எதிர்பாராத நிலையில் கொலம்பியா விண்கலம் அமெரிக்காவின் டெக்சாஸ் வான்பரப்பில் வெடித்து சிதறியது. விண்கலத்தோடு அந்த விலைமதிப்பற்ற 7 வீரர்களும் வெடித்து சிதறினர். அவர்களின் உடல்களை எங்கெங்கோ தேடி இறுதியில் விண்கலத்தின் உடைந்த பாகங்கள் மட்டுமே கண்டெடுக்கப்பட்டன. இது உலகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
🕵 உலகமே வியக்கும் அளவில் விண்வெளித்துறையில் சாதனை படைத்த கல்பனா சாவ்லாவின் இறப்பு இந்தியாவிற்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியது. இந்தியாவின் புகழை உலகம் முழுவதும் கொண்டு சென்றவர்களில் கல்பனா சாவ்லாவும் ஒருவர்.
🕵 கல்பனா சாவ்லா இரண்டு விண்வெளி பயணங்களின் போதும் 30 நாட்கள், 14 மணி நேரங்கள், 54 நிமிடங்களை விண்வெளியில் செலவிட்டு உள்ளார்.
🕵 முதல் விண்கலத்தின் நிறைவில் நட்சத்திரங்களையும், விண்மீன்களையும் நீங்கள் பார்க்கும்போது குறிப்பிட்ட நிலப்பகுதியில் இருந்து பார்ப்பது போல் இருக்காது. சூரிய மண்டலத்தில் இருந்து பார்ப்பது போல் இருக்கும் என்று தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார் கல்பனா சாவ்லா.
இந்திய பிரதமரோடு உரையாடல் :
🕵 அன்றைய இந்திய பிரதமர், கொலம்பிய விண்கலத்தில் பயணித்து கொண்டிருந்த இந்திய விண்வெளி மங்கை கல்பனா சாவ்லாவுடன் தொடர்பினை ஏற்படுத்தி, உங்களால் முழு இந்தியாவும் பெருமையடைகிறது. அதுமட்டுமில்லாமல் தானும் பெருமை கொண்டுள்ளதாக கூறினார். மேலும் உங்களின் மூலம் இந்தியா விண்வெளியில் பயணித்து இருக்கிறது என்றும் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
🕵 எங்கள் நோக்கம் வெற்றிகரமானது, நாங்கள் அனைவரும் நன்றாகவே இருக்கிறோம் என்பதே கல்பனா சாவ்லாவின் கடைசி வார்த்தைகள்.
🕵 மரணத்தின் வாசலை நெருங்கி கொண்டிருப்பதை அறியாது, தனக்கே உண்டான சிரிப்போடு அன்றைய இந்திய பிரதமரோடு கல்பனா சாவ்லா கடைசியாக பேசிய காணொளி, அவருடைய மரணத்திற்கு பிறகு ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிகம் கண் கலங்க வைத்தது.
விருதுகளும்... அங்கீகாரங்களும் :
🕵 அமெரிக்கக் காங்கிரசினால் அவருடைய நினைவாக வழங்கப்பட்ட விண்வெளிப் பதக்கம் (Congressional Space Medal of Honor) வழங்கப்பட்டது.
🕵 நாசாவின் விண்ணோட்ரப் பதக்கம் (NASA Space Flight Medal) வழங்கப்பட்டது.
🕵 நாசாவின் சிறப்புமிகு சேவைக்கான பதக்கம் (NASA Distinguished Service Medal)வழங்கப்பட்டது.
🕵நியூயார்க்கில் உள்ள ஒரு தெருவிற்கு 'சாவ்லா வே (Chawla Way)' என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
🕵 இளம் பெண் விஞ்ஞானிகளை ஊக்குவிக்க கர்நாடக அரசாங்கம் 'கல்பனா சாவ்லா விருதினை' 2004ஆம் ஆண்டிலிருந்து வழங்கி வருகிறது.
🕵 நாசா ஆய்வகம், கல்பனா சாவ்லாவின் நினைவை பறைசாற்றும் விதமாக ஒரு அதிநவீன கணினியை அர்ப்பணித்துள்ளது.
🕵ஜூலை 19, 2001ல் கண்டுபிடிக்கப்பட்ட 51826 எனும் எண்ணை கொண்ட சிறுகோள் ஒன்றிற்கு கல்பனா சாவ்லாவின் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
🕵 இந்தியாவில் பல கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசாங்கப் பொது நிறுவனங்களுக்கு, கல்பனா சாவ்லாவின் நினைவை பறைசாற்றும் வகையில் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
உதவித்தொகை :
🕵கல்பனா சாவ்லா நினைவு உதவித்தொகை திட்டம், எல் பாசோவின் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் உள்ள இந்திய மாணவர் சங்கத்தால் (ISA) 2005ஆம் ஆண்டு தகுதிவாய்ந்த பட்டதாரி மாணவர்களுக்காக நிறுவப்பட்டது.
🕵 பஞ்சாப் பொறியியல் கல்லூரி, கல்பனா சாவ்லாவின் பெயரில் ஒரு பெண்கள் விடுதியை ஆரம்பித்ததுடன், அவர் படித்த வான ஊர்தி பொறியியல் துறையில் தலைச்சிறந்த மாணவருக்கு இந்திய ரூபாயில் இருபத்தைந்தாயிரமும், ஒரு பதக்கம் மற்றும் ஒரு சான்றிதழையும் வழங்குகிறது.
👩🚀 மேரிலாந்தில் உள்ள Naval Air Station Patuxent River-ல் உள்ள தனது இராணுவ வீட்டு வசதி வாரியத்திற்கு கொலம்பியா காலனி என்று பெயரிட்டுள்ளது. அங்கு சாவ்லா வே (Chawla Way) எனும் தெருவும் உள்ளது.
கோளரங்கம் :
👩🚀 குருச்சேத்திரத்தில் உள்ள ஜ்யோடிசர் (Jyotisar) எனும் இடத்தில் கட்டியுள்ள கோளரங்கத்திற்கு ஹரியானா அரசாங்கம் கல்பனா சாவ்லா கோளரங்கம் என்று பெயரிட்டுள்ளது.
இதழ் மற்றும் புதினத்தில் கல்பனாவின் பெயர் :
👩🚀 சிறுக்கோள் 51826 கல்பனா சாவ்லா - கொலம்பியா விண்வெளிக் குழுவின் பெயரில் அளித்த ஏழு பாராட்டு இதழ்களில் ஒன்று.
👩🚀 நாவலாசிரியர் பீட்டர் டேவிட் அவரது ஸ்டார் டிரெக்: தி நெக்ஸ்ட் ஜெனரேஷன் : பிபோர் டிசோனர் (Star Trek: The Next Generation: Before Dishonor) எனும் புதினத்தில் ஒரு கதாபாத்திரத்திற்கு சாவ்லா என்று பெயரை வைத்ததுடன், அந்த கதாபாத்திரத்தின் பெயரான சாவ்லாவை அந்த புதினத்தில் வரும் விண்கலத்திற்கும் வைத்துள்ளார்.
👩🚀 ஆர்லிங்க்டனில் இருக்கும் டெக்சாஸ் பல்கலைக்கழகம் கல்பனா சாவ்லா ஹால் (Kalpana Chawla Hall) என்ற விடுதியை 2004ஆம் ஆண்டு துவக்கியது. இதே பல்கலைக்கழகத்தில் தான் கல்பனா தனது முதல் முதுகலைப்பட்டத்தை பெற்றார்.
👩🚀 புளோரிடாவில் உள்ள தொழில்நுட்ப நிறுவனம் Columbia Village Suites என்ற அடுக்கு மாடிக்கட்டிடங்களை தனது மாணவர்கள் தங்குவதற்கு கட்டி தந்துள்ளது. அதில் உள்ள கூடங்களுக்கு கொலம்பியா குழுவில் சென்ற வீரர்களின் பெயர்களை சூட்டியுள்ளனர். அதில் சாவ்லா கூடமும் உண்டு.
👩🚀 நாசா மார்ஸ் எக்ச்பிலோரேஷன் ரோவர் மிஷன் (The NASA Mars Exploration Rover mission) தனது கட்டுப்பாட்டில் உள்ள மலைச்சிகரங்களுக்கு கொலம்பியா குன்றுகள் என்று பெயரிட்டதுடன், ஒவ்வொரு சிகரத்திற்கும் மறைந்த விண்வெளி வீரர்களின் பெயரை சூட்டியுள்ளது. கல்பனா பெயரிலும் ஒரு குன்று உள்ளது.
👩🚀 இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி (Indian Institute Of Technology), கரக்பூரில் கல்பனா சாவ்லா ஸ்பேஸ் டெக்னாலஜி செல் (Kalpana Chawla Space Technology Cell) என்று பெயரிட்டுள்ளது.
👩🚀 டீப் பர்பில் என்ற குழுவை சேர்ந்த ஸ்டீவ் மோர்சே, கொலம்பியா விபத்தை பற்றி 'காண்டாக்ட் லோஸ்ட் (Contact Lost)' என்ற பாடலை பாடியுள்ளார்.
கல்பனா சாவ்லா தனது கனவுகளை பற்றி உதிர்த்த வார்த்தைகள் :
👩🚀 'எனக்கு சிறுவயது முதல் விண்வெளி என்றால் அப்படி ஓர் ஆசை. மொட்டை மாடியில் அமர்ந்து வானத்தையே பார்த்து கொண்டிருப்பேன். நட்சத்திரங்களை எண்ணுவேன். என்னை நண்பர்கள் கேலி செய்வார்கள். ஆனால், வானிலிருந்து எனக்கு மட்டும் ஒரு அழைப்பு குரல் கேட்டுக்கொண்டே இருக்கும்...'
👩🚀 'சிறுவயதில் இருந்த அந்த பிரம்மிப்பு நிஜமாகவே.. விண்வெளியில் பறந்தபிறகு அடங்கியதா?' என்றால் இல்லவே இல்லை... விண்வெளியிலிருந்து நட்சத்திரங்களையும், விண்மீன்களையும் பார்க்கும்போது நாம் பூமியை சேர்ந்தவர்கள்தானா? அல்லது வேற்றுக்கிரக மனிதர்களா? என்றே ஒரு மயக்கம் கலந்த சந்தேகம் வரும்' என்றார்.
👩🚀 '1986ஆம் ஆண்டு டெக்சாஸ் மாநிலத்திலுள்ள ஆர்லிங்டன் பல்கலைக்கழகத்தில் விண்வெளி பற்றிய மேற்பட்டப்படிப்பு படிக்க அட்மிஷன் கிடைத்தது... அதுதான் என் வாழ்க்கையின் பொன்னான நேரம். ஒரு குழந்தையை போல் குதூகலித்தேன். கொலராடோ பல்கலைக்கழகத்தில் டாக்டரேட் படிப்பை வெற்றிகரமாக முடித்தபோது எனது விண்வெளிக் கனவுகள் வசப்படும் என்று முழு நம்பிக்கை வந்தது.
👩🚀 கல்லூரி நாட்களில் லாக்கிட் என்னும் புகழ்பெற்ற நிறுவனத்தின் ஸ்கன்க் வொர்க்ஸ் எனும் விண்வெளி கலங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை பற்றிய புத்தகங்களை படித்தேன். பிறகு நாசாவில் வேலைக்கு சேரும்போது இந்த புத்தக அறிவு பெரிய அளவு கைக்கொடுத்தது.
👩🚀 அதுமட்டுமல்ல, இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்குள் அடியெடுத்து வைத்தபோதே இந்த நாட்டின் விஞ்ஞானத்தை பற்றி முழுதாக உள்வாங்கி கொண்டேன். அதுதான் இங்கிருக்கும் விஞ்ஞானிகளோடு சரிக்கு சமமாக பணிபுரிய எனக்கு கைக்கொடுத்தது' என கூறினார்.
👩🚀 கல்பனா சாவ்லா என்ற என்னுடைய பெயரை சுருக்கமாக 'கேசி' என்றுதான் நாசா விஞ்ஞானிகள் அழைப்பார்கள்.
👩🚀 முதன்முறையாக, நான் 1997ஆம் ஆண்டு விண்வெளியில் பறந்தபோது, எனது மேற்பார்வையில் இருந்த துணை சாட்டிலைட் ஒன்று கழன்று தனியாக பிரிந்து போய்விட்டது. எனது சக விண்வெளி வீரர்கள் விண்வெளியில் ஸ்பேஸ் வாக் செய்து அதை மீட்டனர்.
👩🚀 இதுபற்றி எனக்கு கடைசிவரை மனவருத்தம் இருந்தது. 'இதனால் என் விண்வெளி பயண வாழ்க்கைக்கே ஒரு முடிவு என்று பயந்தேன். நல்ல வேளையாக எனக்கு மேலே பணிபுரிந்த விஞ்ஞானிகள் அதை பெரிதுப்படுத்தவில்லை' என்று பெருமிதத்தோடு கூறினார்.
👩🚀 'நான் தினமும் வீட்டிலும் ரவிசங்கரின் இசையை கேட்டபடிதான் கண் விழிப்பேன். நம் நாட்டின் இசை பாரம்பரியத்திற்கு ஈடு, இணை ஏது?' என்று கூறினார்.
👩🚀 ஒருமுறை அன்றைய பிரதமர் வாஜ்பாய் அமெரிக்கப் பயணம் மேற்கொண்டபோது பிரபலமான இந்தியர்களை சந்திக்க ஏற்பாடு செய்திருந்தனர். அதில் பிரதமரே பார்க்க ஆர்வம் காட்டிய வி.ஐ.பி, கல்பனா சாவ்லாவைதான். பிரதமரிடம் சிறுகுழந்தை போல குதூகலித்து பேசியிருக்கிறார் கல்பனா சாவ்லா.
👩🚀 'இங்கே நான் வந்துவிட்டாலும் என் இதயம் எல்லாம் இந்தியாதான். விண்ணிலிருந்து பார்த்தால் பாரதத்தின் கங்கை நதியும், இமயமலையும் எவ்வளவு மெஜஸ்டிக்காக தெரிந்தன, தெரியுமா? பார்த்து பார்த்து பரவசப்பட்டேன்' என்று அவர் சொன்னபோது பிரதமர் வாஜ்பாய்க்கும் நெகிழ்ச்சி ஏற்பட்டது.
கொலம்பியா விண்வெளி பயணத்திற்கு முன் :
👩🚀 கொலம்பியா விண்வெளி பயணத்தை கல்பனா சாவ்லா மேற்கொள்வதற்கு முன் அவரிடம் நடத்தப்பட்ட பேட்டியில், உங்களை ஊக்கப்படுத்தியவர்கள் அல்லது ஊக்கப்படுத்தி கொண்டிருப்பவர்கள் யார்? என்று கேட்கப்பட்டது.
அதற்கு கல்பனா இவ்வாறு கூறினார் :
👩🚀 முழுமனதோடு ஒரு காரியத்தில் ஈடுபடும் எவரை பார்த்தாலும் எனக்கு ஊக்கம் ஏற்படும். உதாரணத்திற்கு எனது உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் தங்கள் பணியை அவர்கள் முழுமனதோடு செய்த விதம், கற்பிப்பதில் எங்களோடு அதிக நேரத்தை செலவிட்ட விதம் என அவர்களின் பொறுமையை பற்றி இப்போது நினைத்து பார்த்தாலும் வியப்பாக உள்ளது. இதைத்தவிர மேலும் கண்டுபிடிப்பாளர்களின் கதைகளும் எனக்கு ஊக்கம் தரும் என்றார்.
👩🚀 வானத்தை பார்த்து கனவு கண்ட கல்பனா சாவ்லா, அந்த வானத்தையே வசமாக்கி கொண்டதில் ஆச்சரியமில்லை. நம் எல்லோரையும் விட வானத்திற்கு அருகில் சென்றுவிட்டு வந்தவர் கல்பனா சாவ்லா.
👩🚀 கனவோடு கலந்த உழைப்பும், முழுமனதோடு காரியத்தில் ஈடுபடும் பண்பும்தான் கல்பனாவை விண்ணிற்கு கொண்டு சென்றது. அவர் பிறந்த நமது இந்திய மண்ணிற்கும் பெருமை சேர்த்தது.
கல்பனா சாவ்லாவை பற்றி அவரது தந்தை கூறியவை :
👩🚀 விண்வெளி வரை சென்று சாதனை புரிந்த கல்பனா சாவ்லாவின் சிறு வயது நிகழ்வுகளை மகிழ்ச்சியாகவும், உருக்கமாகவும் தெரிவித்திருந்தார் கல்பனா சாவ்லாவின் தந்தை பனாரஸ் லால் சாவ்லா.
👩🚀 அதாவது, 'அவளுடைய 3 வயதில் கர்னல் மாவட்டத்தில் ஃபிளையிங் கிளப்பிற்கு அருகேதான் நாங்கள் குடியிருந்தோம். தலைக்கு மேலே விமானம் பறப்பதை பார்த்து, ரசித்து கொண்டே இருப்பாள். ஒருமுறை, கிளப்பிற்கு அழைத்து செல்லுமாறு தொந்தரவு செய்தாள். அப்போது முதல், அவளோடு சேர்த்து அவளின் சகோதரனையும் ஃபிளையிங் கிளப்பிற்கு அழைத்து செல்வேன். விமானத்தை பார்த்து வியப்பாள்.
👩🚀 எப்படி பறக்கிறது? தரையில் எப்படி ஓடுகிறது? எனக் கேள்விகளாக கேட்டு கொண்டே இருப்பாள். பின்பு அங்கே ஒருமுறை விமானத்தில் பயணித்தோம். அதற்கு பிறகு விமானத்தின் மீதான காதல் அவளிடம் இன்னும் அதிகரித்தது.
👩🚀 காகித விமானங்கள் செய்து பறக்க வைக்க முயன்றுகொண்டிருப்பாள். பள்ளியிலும் விமானத்தின் மீதான காதல் கல்பனாவை விடவில்லை. அந்த காதல்தான் அவளை விண்வெளி வீராங்கனை ஆக்கியது' என்றார்.
👩🚀 கல்பனாவின் பண்பை பற்றி கூறும்போது, 'என் மகள் எதையும் விட்டுக்கொடுக்காதவள். பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் ஏரோஸ்பேஸ் என்ஜினீயரிங் சேர்வதற்காக விண்ணப்பித்திருந்தாள். ஆனால், அவளின் பேராசிரியர் ஒருவர் தொடர்ந்து அவளுக்கு அவநம்பிக்கையையே விதைத்துக்கொண்டு இருந்தார். அதையெல்லாம் மீறி அவள் படித்து முடித்தாள், பின்பு அமெரிக்க பல்கலைக்கழகத்திலும் மேற்படிப்பை தொடர்ந்தாள்' என்று பெருமிதம் கொண்டார் கல்பனாவின் தந்தை.
👩🚀 மேலும், 'மேற்படிப்பிற்கு விண்ணப்பிக்கும் நடைமுறையின்போது நான் சில நாட்கள் பிஸியாக இருந்தேன். அதனால் என் மகள் எனக்காக காத்துக்கொண்டே இருந்தாள். அவளை காக்க வைத்த குற்ற உணர்ச்சி இன்னும் என் மனதில் இருக்கிறது' என்று உணர்ச்சிவசப்பட்டார்.
👩🚀 'மகள்கள் எதையுமே பெற்றோரின் ஆலோசனையோடும், அவர்களின் கவனத்தோடும் நடத்தி கொள்ள விரும்புவார்கள். எனவே, மகள்களுக்கு பக்கபலமாய் பெற்றோர்கள் இருக்க வேண்டும். அவர்களின் கனவுகள் நனவாவதற்கு துணை நின்றால், அவர்களுக்கு அதைவிட பெரிய மகிழ்ச்சி வேறு எதுவும் இருக்கப்போவதில்லை. பெற்றோர்கள் வேலைகளோடு சமரசம் செய்துகொண்டு குழந்தைகளோடு நேரம் செலவழிக்க வேண்டும்' என்றார் கல்பனாவின் தந்தை.
கல்பனா சாவ்லாவை பற்றி அவரது சகோதரர் கூறியவை :
👩🚀 'கல்பனாவிற்கு விண்ணில் பறக்கும் ஆர்வம் வர காரணம், எங்களுடைய அப்பாதான். கர்னாலிஸ் ஃபிளையிங் கிளப் ஒன்றில் எங்களுடைய அப்பாவும் ஓர் உறுப்பினர். அடிக்கடி ரைடு செல்வார். இதை பார்த்து கல்பனாவிற்கும் விண்ணில் பறக்கும் ஆசை வந்தது. இந்த கிளப்பில் சேர்ந்து ஃபிளையிங் கற்றுக்கொண்டாள். இருந்தாலும், அவளை ஒரு டாக்டராகவோ, என்ஜினீயராகவோ ஆக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய விருப்பமாக இருந்தது. அதையும் மீறி அவளது விண்வெளி ஆசையே ஜெயித்தது.
👩🚀 அப்பாவோடு ஸ்பெஷல் தொழில்நுட்பத்தின் உதவியோடு விண்வெளியில் இருந்தபடியே பேசினாள் கல்பனா. அங்கிருந்து பூமியைப் பார்க்கும்போது மிகவும் அழகாக இருக்கிறது என்றெல்லாம் ரசித்து சொல்லியிருக்கிறார்.
👩🚀 கொலம்பியா விண்வெளி பயணம் முடிந்து வெற்றிகரமாக தரையிறங்கியதும் இந்தியாவிற்கு வர வேண்டும். அங்கே நிறைய விஷயங்களை பகிர்ந்து கொண்டு தாய் நாட்டிற்கு உதவ வேண்டும் என்றெல்லாம் சொல்லியிருக்கிறார். இதன்மூலம் எங்களுக்கும் பெருமை தேடித் தரப்போகிறாள் என்று நாங்கள் ஆவலோடு காத்திருந்தோம். ஆனால், எங்கள் ஆசையில் மண் விழுந்துவிட்டது' என்று தன்னுடைய உணர்வுகளை பகிர்ந்து கொண்டார் கல்பனா சாவ்லாவின் சகோதரர் சஞ்சய்.
கல்பனா சாவ்லாவின் திருமணம் :
👩🚀 அமெரிக்காவிற்கு சென்ற போது, 1982ஆம் ஆண்டு செப்டம்பர் 2ஆம் தேதி விமானப் பயிற்சி ஆசிரியரான ஜீன் பியர் ஹாரிசனும், கல்பனாவும் சந்தித்து கொண்டனர். பிறகு இவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்தது. பிறகு, 1983ஆம் ஆண்டு டிசம்பர் 3ஆம் தே