Monday, 25 January 2021

மகாத்மா காந்தி வரலாறு

பெயர் : மகாத்மா காந்தி
பிறப்பு : 02-10-1869
இறப்பு : 30/01/1948
பெற்றோர் : கரம்சந்த் உத்தம்சந்த் காந்தி, புத்திலிபாய்
இடம் : போர்பந்தர், குஜராத்
வகித்த பதவி : விடுதலை போராட்ட வீரர்

வரலாறு:-மகாத்மா காந்தி!!
👉 மகாத்மா காந்தி அவர்கள், 1869ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 02ஆம் தேதி, குஜராத் மாநிலத்திலுள்ள 'போர்பந்தர்' என்ற இடத்தில் கரம்சாந்த் காந்திக்கும், புத்திலிபாய்க்கும் மகனாக பிறந்தார். காந்தியின் இயற்பெயர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என்பதாகும். இவருடைய தாய்மொழி குஜராத்தி ஆகும். மேலும் இவருடைய தந்தை கரம்சாந்த் காந்தி, போர்பந்தரில் ஒரு திவானாக பணியாற்றி வந்தார்.

ஆரம்பக்கல்வி மற்றும் திருமண வாழ்க்கை :

👉 மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்கள், பள்ளியில் படிக்கும்போதே நேர்மையான மாணவனாக விளங்கினார். பள்ளிப்படிப்பில் ஒரு சுமாரான மாணவனாகவே காணப்பட்டார் காந்தி.

👉 காந்தி தனது 13ஆம் வயதில் கஸ்தூரிபாயை மணந்தார். இவர்களுக்கு நான்கு ஆண் குழந்தைகள் பிறந்தனர்.

👉 ஹரிலால் (1888)

👉 மணிலால் (1892)

👉 ராம்தாஸ் (1897)

👉 தேவதாஸ் (1900)

👉 மோகனதாஸ் கரம்சந்த் காந்தி, தனது 16வது வயதில் தந்தையை இழந்தார்.

👉 தனது 18ஆம் வயதில் பள்ளிப்படிப்பு முடிந்த பிறகு பாரிஸ்டர் (barrister) எனப்படும் வழக்கறிஞர் படிப்பிற்காக காந்தி இங்கிலாந்து சென்றார். தன் படிப்பை வெற்றிகரமாக முடித்து தாயகம் திரும்பிய காந்தி பம்பாயில் சிறிது காலம் வழக்கறிஞராக பணியாற்றினார்.

👉 இது வெற்றிகரமாக அமையாததால் தன் அண்ணன் இருப்பிடமான ராஜ்கோட்டிற்கு சென்ற காந்தி, அங்குள்ள நீதிமன்றத்தில் வழக்காட வருபவர்களின் படிவங்களை நிரப்பும் எளிய பணியில் ஈடுபட்டார்.

👉 ஆனால், அங்கிருந்த ஆங்கிலேய அதிகாரியிடம் ஏற்பட்ட சிறிய தகராறால் இவ்வேலையும் பறிபோனது.

காந்தியின் தென்னாப்பிரிக்க அனுபவம் :

👉 பம்பாய் மற்றும் ராஜ்கோட்டில் சிறிதுகாலம் பணியாற்றிய மகாத்மா காந்தி, 1893ஆம் ஆண்டு ஒரு இந்திய நிறுவனத்தின் உதவியால் தென்னாப்பிரிக்காவில் பணிபுரிய பயணமானார்.

👉 அந்தசமயம் தென்னாப்பிரிக்காவில் ஆங்கிலேயர் ஆட்சியில் நிறவெறியும், இனப்பாகுபாடும் மிகுந்து இருந்தது. அன்றுவரை அரசியல் ஈடுபாடின்றி இருந்த காந்தியின் மனதில் அந்த பயணம் அவருக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல், பின்னாளில் அவரை ஒரு மாபெரும் அரசியல் சக்தியாகவும் மாற்றியது.

👉 டர்பன் நகரில் உள்ள நீதிமன்றத்தில் ஒருநாள் இந்திய வழக்கப்படி தலைப்பாகை அணிந்து வழக்காடச் சென்ற காந்தியிடம் அத்தலைப்பாகையை விலக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

👉 காந்தியோ உத்தரவை எதிர்க்கும் பொருட்டு நீதிமன்றத்தை விட்டு உடனே வெளியேறினார். பிறகு ஒருநாள் பிரிட்டோரியா செல்வதற்காக தகுந்த பயணச்சீட்டுடன் ரயிலில் முதல் வகுப்பு பெட்டியில் பயணம் செய்தார். அவர் ஒரு வெள்ளையர் இல்லை என்ற காரணத்திற்காக, ஆங்கிலேய அதிகாரி ஒருவரால் ரயில் பெட்டியிலிருந்து தூக்கி எறியப்பட்டார்.

👉 வெள்ளையர் அல்லாத ஒரே காரணத்தால் இதுபோன்று பல இன்னல்களை காந்தி அனுபவித்தார். இதன்மூலம் தென்னாப்பிரிக்காவின் கறுப்பின மக்களும், அங்கே குடியேறிய இந்தியர்களும் படும் இன்னல்களை காந்தி நன்கு உணர்ந்தார்.

👉 தனது ஒப்பந்தக்காலம் முடிவடைந்து இந்தியா திரும்ப காந்தி தயாரானபோது, அங்குள்ள இந்தியரின் வாக்குரிமையை பறிக்கும் தீர்மானத்தை இயற்ற இருப்பதாக செய்தித்தாளில் படித்தறிந்தார்.

👉 இதை எதிர்க்குமாறு காந்தி அவரது இந்திய நண்பர்களிடம் அறிவுறுத்தினார். அவர்களோ, தங்களிடம் இதற்கு தேவையான சட்ட அறிவு இல்லையென கூறி காந்தியின் உதவியை நாடினர்.

👉 காந்தியும் அவர்கள் வேண்டுகோளுக்கு இணங்கி, தன் தாயகம் திரும்பும் முடிவை மாற்றிக்கொண்டு இத்தீர்மானத்தை எதிர்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டார். இதன்மூலம் அங்குள்ள இந்தியர்களிடம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

👉 மகாத்மா காந்தி, 1894ஆம் ஆண்டு நாட்டல் இந்திய காங்கிரஸ் என்ற பெயரில் கட்சி தொடங்கி அதற்கு அவரே பொறுப்பாளரானார். இதன்மூலம் நாட்டல் மாகாணத்திலிருந்த இந்தியர் அனைவரையும் ஒன்று திரட்டி, அவர்களை தங்கள் உரிமைக்காக குரலெழுப்ப ஊக்கப்படுத்தினார்.

👉 1906ஆம் ஆண்டு ஜோகன்னஸ்பேர்க் நகரில் நடந்த ஒரு போராட்டத்தில் முதன்முறையாக சத்தியாகிரகம் எனப்படும் அறவழி போராட்டத்தை பயன்படுத்தினார். அகிம்சை, ஒத்துழையாமை, கொடுக்கப்படும் தண்டனையை ஏற்றல் ஆகிய கொள்கைகள் இவ்வறவழி போராட்டத்தின் பண்புகளாகும்.

👉 இந்த காலக்கட்டத்தில் காந்தியும் அவருடன் சேர்ந்து போராடியவர்களும் பலமுறை சிறை சென்றனர். தொடக்கத்தில் ஆங்கில அரசாங்கம் இவர்களை எளிதாக அடக்கியது போல் தோன்றியது.

👉 பின்னர் பொதுமக்களும், ஆங்கில அரசாங்கமும் இவர்களின் உண்மையான மற்றும் நேர்மையான வாதங்களை புரிந்துகொண்டு இவர்களுடைய கோரிக்கைகளை ஏற்கும் நிலை ஏற்பட்டது. இவ்வாறு தனது அறவழி போராட்டத்தின் மூலம் தென்னாப்பிரிக்க வாழ் இந்தியரின் சமூக நிலையை மேம்படுத்தும் முயற்சியில் வெற்றி கண்ட காந்தி தாயகம் திரும்பினார்.

👉 1915ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி மும்பை துறைமுகத்தில் காந்தி இறங்கியபோது உடையில் அடியோடு உருமாறியிருந்தார். தழையத் தழையக் கட்டிய மில் வேட்டி, தொள தொள ஜிப்பா, அங்கவஸ்திரம், தலையில் பெரிய முண்டாசு போன்றவற்றை துறந்து ஒரு விவசாயி உடையில் காட்சியளித்தார்.

👉 அப்பல்லோ பந்தர் துறைமுகத்தில் இறங்கிய காந்தி - கஸ்தூரிபா தம்பதி வெளியே வந்தபோது ஒரு கோலாகல வரவேற்பளிக்க, மிதவாத அரசியல் தலைவர் கோபாலகிருஷ்ண கோகலே ஏற்பாடு செய்திருந்தார்.

👉 மேல் விரிப்பு திறந்த மோட்டார் காரில் காந்தியையும், அவரது மனைவியையும் அமரச் செய்து ஊர்வலமாக இட்டுச் சென்றார். (காந்தி தாயகம் திரும்பிய நாளை அடிப்படையாகக் கொண்டு ஜனவரி 9ஆம் தேதியை வெளிநாடு வாழ் இந்தியர் தினமாக 2002ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டது.)

இந்திய விடுதலை போராட்டத்தில் காந்தி :

👉 தென்னாப்பிரிக்காவில் காந்தி தலைமையேற்று நடத்திய போராட்டங்களை பற்றி இந்திய மக்கள் அறிந்திருந்தனர். காந்திக்கு, கோபால கிருஷ்ண கோகலே, ரவீந்திரநாத் தாகூர் போன்றோருடன் நட்பு ஏற்பட்டது.

👉 காந்தி இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்து ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலை போராட்டத்தில் முழு வீச்சில் ஈடுபட்டார்.

👉 இதன்மூலம் இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கத்தின் தலைவராக காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார். தலைமையேற்றவுடன் காங்கிரசில் பல மாற்றங்களை அறிமுகப்படுத்தி இயக்கத்திற்கு புத்துயிர் ஊட்டினார்.

👉 அறப்போராட்ட வழிமுறைகளையும், சுதேசி போன்ற கொள்கைகளையும் வலியுறுத்தி காங்கிரஸ் இயக்கத்தை இந்தியாவின் மாபெரும் விடுதலை இயக்கமாக்கினார்.

ஒத்துழையாமை இயக்கம் :

👉 ரவ்லத் சட்டம் மற்றும் ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு குரல் கொடுக்கவும், இந்திய அரசு சட்டத்தில் இந்தியருக்கு வழங்கப்பட்டிருந்த குறைவான அதிகாரங்களை ஏற்க மறுத்தலை வெளிக்காட்டவும், காந்தி ஒத்துழையாமை இயக்கத்தினை 1920ஆம் ஆண்டு தொடங்கினார்.

👉 ஆங்கில அரசிடமிருந்து பெற்ற பதவிகளையும், பட்டங்களையும், விருதுகளையும் துறத்தல்,

👉 வேலைநிறுத்தம், அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் சட்டமன்ற நடவடிக்கைகள் அனைத்தையும் புறக்கணித்தல்,

👉 வரி செலுத்துவதை மறுத்தல் போன்ற கருத்துக்கள் ஒத்துழையாமை இயக்கத்தில் வலியுறுத்தப்பட்டன.

👉 இளையத் தலைமுறை மற்றும் தேசியவாதிகளிடையே இந்த இயக்கம் பெரும் ஆதரவைப் பெற்றது மட்டுமல்லாமல், ஒத்துழையாமை இயக்கத்தின் வெற்றியால், காந்தி இந்திய தேசிய காங்கிரஸின் தனிப்பெரும் தலைவராக உருவெடுத்தார்.

👉 1922ல் உத்திரப் பிரதேசத்தில் சௌரி சௌரா என்ற இடத்தில் விடுதலை இயக்கத்தினருக்கும், காவல்துறையினருக்கும் மோதல்கள் ஏற்பட்டன.

👉 காவல்துறையினரின் செயல்பாட்டால் சில விடுதலை இயக்கத்தினர் மரணமடைந்தனர். இதனால் கோபம் கொண்ட மற்றவர்கள் காவல்நிலையத்தை தீயிட்டு கொளுத்தினர். இதில் 22 காவல்துறையினர் கொல்லப்பட்டனர். இதனால் வன்முறை இந்தியாவின் வேறு சில பகுதிகளுக்கும் பரவியது.

👉 அறவழியில் நடந்து வந்த இயக்கம் வன்முறை பாதையில் செல்வதை கண்ட காந்தி அதிர்ச்சியடைந்தார். ஒத்துழையாமை இயக்கம் வன்முறை இயக்கமாக மாறுவதை தடுக்க, அதனை நிறுத்தி கொள்வதாக அறிவித்தார். வன்முறை ஓயும் வரை மூன்று வாரங்கள் உண்ணாநிலை போராட்டமொன்றை நடத்தினார். இதனால் ஒத்துழையாமை இயக்கம் வலுவிழந்து நின்று போனது.

👉 வன்முறையை தடுக்க காந்தி பாடுபட்டாலும், அரசு அவர் மீது ஆட்சி விரோத எழுத்துக்களை வெளியிட்டார் என்று குற்றம் சாட்டி ஆறாண்டுகள் சிறையில் அடைத்தது. இதையடுத்து இரண்டே ஆண்டுகளில் காந்தி விடுதலை ஆனார்.

காந்தியின் தண்டி யாத்திரை :

👉 1930ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு, இந்தியாவில் தயாரிக்கப்படும் உப்புக்கு வரி விதித்தது. மேலும், இந்தியாவில் தயாரிக்கப்படும் உப்பை பிரிட்டிஷ் அரசாங்கத்தை தவிர வேறு யாரும் விற்கக்கூடாது என்ற சட்டத்தையும் இயற்றியது. இதை விலக்கிக் கொள்ளுமாறு காந்தி பிரிட்டிஷாரிடம் விடுத்த கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது.

👉 இதனை ஏற்க மறுத்த காந்தியடிகள், 'தன்னுடைய நாட்டில் விளைந்த பொருளுக்கு அன்னியர் வரி விதிப்பதா?' எனக் கருதி, சத்தியாகிரக முறையில் இதை எதிர்க்க முடிவு செய்தார்.

👉 1930ஆம் ஆண்டு மார்ச் 12ஆம் தேதி குஜராத்தின் தண்டியில், ஆங்கிலேயரின் எதிர்ப்பையும் தாண்டி உப்பு எடுப்பதற்காக இந்த நடைபயணம் துவங்கியது. சபர்மதி ஆசிரமத்திலிருந்து 240 மைல் தூரத்திலுள்ள தண்டிக்கு மகாத்மா காந்தி வழிநடத்திய இந்தப் பயணம் 23 நாட்கள் நீடித்தது. 4 மாவட்டங்கள் மற்றும் 48 கிராமங்கள் வழியே கடந்து சென்றது இப்பயணம்.

👉 காந்தியின் சபர்மதி ஆசிரமத்தில் இருந்த 78 சத்தியாகிரகிகளுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பயணம் நிறைவுபெறும்போது சுமார் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்டவர்களை உள்ளடக்கியிருந்தது.

👉 இறுதியில் தண்டியை வந்தடைந்த அவர், அங்கிருந்த கடல் நீரில் உப்பு காய்ச்சி ஆங்கில சட்டத்திற்கு எதிராக அதை விநியோகித்தார். இந்த நிகழ்வு இந்தியாவில் பல இடங்களில் பரவியது மட்டுமல்லாமல், போராட்டம் தீவிரம் அடைந்து காந்தி உட்பட பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

👉 ஆனால், போராட்டம் தீவிரம் அடைவதைக் கண்ட ஆங்கில அரசு, வேறு வழியில்லாமல் காந்தியுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்கள் விதித்த உப்புவரியை திரும்பப் பெற்று கொண்டனர். 'உப்பு சத்தியாகிரகம்' என்ற இந்நிகழ்வு இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது என கூறலாம்.

வெள்ளையனே வெளியேறு இயக்கம் :

👉 1942ஆம் ஆண்டு மகாத்மா காந்தி, மும்பையில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில், 'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தை தொடங்கினார்.

👉 இது 'ஆகஸ்ட் புரட்சி' எனவும் அழைக்கப்பட்டது. சுதந்திரத்தை லட்சியமாக கொண்டு, ஒத்துழையாமை இயக்கம் முன்னிலைப்படுத்தப்பட்டது. அறவழியில் போராட வேண்டும் என்பதை காந்தி வலியுறுத்தினார்.

👉 'செய் அல்லது செத்து மடி' என்ற தாரக மந்திரத்தை உணர்ச்சி பொங்க காந்தி முழங்கினார். அதற்கு அடுத்த நாளே காந்தி, நேரு போன்ற தேசத் தலைவர்கள் பலரும் சிறையில் அடைக்கப்பட்டனர். அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டி தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவிக்கப்பட்டது. பொதுக் கூட்டங்களுக்கும் தடை விதிக்கப்பட்டது.

👉 இதனால் வெள்ளையரை எதிர்த்து நாடெங்கும் கிளர்ச்சிகள் நடைபெற்றன. 1,00,000 நபர்களுக்கு மேல் சிறையில் அடைக்கப்பட்டனர். சுதந்திரத்திற்காக இந்தியர்களை ஒரே அணியில் திரள வைத்த பெருமை வெள்ளையனே வெளியேறு இயக்கத்தையே சேரும்.

👉 காந்தியின் மன உறுதியையும், அகிம்சை பலத்தையும் கண்டு ஆங்கில அரசு திகைத்தது. இறுதியில் காந்தியின் இடைவிடாத போராட்டத்தால், இந்தியாவிற்கு சுதந்திரம் அளிக்க பிரித்தானிய அரசு முன்வந்தது. ஆனால் அதற்கு பின் காந்திக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.

இந்தியா - பாகிஸ்தான் பிரிவினை :

👉 இந்தியாவில் எங்களுக்கு நியாயம் கிடைக்காது என்பதால் எங்களுக்கு தனிநாடு வேண்டும் என்று வாதிட்டது முஸ்லிம்களின் பிரதிநிதியான முஸ்லிம் லீக் கட்சி.

👉 காந்திக்கு இதில் துளிகூட சம்மதமில்லை. ஆனால் நேருவும், பட்டேலும் வேறு வழியில்லை என்று கூறினர். எனவே காந்தியை வேதனையில் மூழ்கடித்துவிட்டு பாரதத்தை இந்தியா, பாகிஸ்தான் என்று இரண்டாகப் பிரிக்க முடிவெடுக்கப்பட்டது.

👉 பல போராட்டங்களுக்குப் பின் ஒரு வழியாக 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தது. டெல்லி செங்கோட்டையில் பீரங்கிகள் முழங்க பல தலைவர்களும், மக்களும் அணி திரண்டு மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்தனர். தங்கள் சுதந்திர தாகம் தீர்ந்ததை எண்ணி குதூகளித்தனர்.

👉 ஆனால் அந்த சுதந்திரத்திற்கு எவர் அடிப்படை காரணமாக விளங்கினாரோ அவர் அந்தக்கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.

👉 சுதந்திரம் கிடைத்த மகிழ்ச்சியைவிட நாடு இரண்டாக பிளவுபட்டதை எண்ணிக் கலங்கிய காந்தியடிகள் அன்றைய தினம் டெல்லியைவிட்டு வெகுதொலைவில் உள்ள கல்கத்தாவில் உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்தார். தன் கடைசி மூச்சுவரை அந்த பிரிவினையால் துயருற்றியிருந்தார் காந்தியடிகள்.

👉 காந்தியடிகள் அஞ்சியதுபோலவே இந்தியாவும், பாகிஸ்தானும் சுதந்திரம் அடைந்த ஒருசில தினங்களுக்குள்ளாகவே இந்தியாவிலிருந்து லட்சக்கணக்கான முஸ்லிம்கள் பாகிஸ்தானுக்கும், பாகிஸ்தானிலிருந்து லட்சக்கணக்கான இந்துக்கள் இந்தியாவிற்கும் இடம் பெயர்ந்தனர்.

👉 தன் வாழ்நாள் முழுவதும் இந்து - முஸ்லிம் ஒற்றுமையையும், ஒன்றுபட்ட சுதந்திர இந்தியாவையுமே கற்பனை செய்து வந்த காந்தியடிகள் ஒடிந்துபோனார். கசப்புணர்வு மேம்பட்டிருந்தாலும் அப்போதும்கூட அவர் எல்லாவற்றையும் வெறுத்து ஒதுக்கிவிட்டு ஒதுங்கிவிடவில்லை. மதக்கலவரத்தால் துவண்டு போயிருந்த மக்களுக்கு ஆறுதலும், அமைதியும் கூற 'நவக்காளி' யாத்திரை மேற்கொண்டார்.

காந்தியின் மரணம் :

👉 1948ஆம் ஆண்டு ஜனவரி 30ஆம் தேதி புதுதில்லியில் ஒரு பிரார்த்தனை கூட்டத்தில் கலந்துகொள்ள வந்திருந்தார் காந்தியடிகள்.

👉 சரியாக 10 நாட்களுக்கு முன்னர் அதேபோன்ற ஒரு பிரார்த்தனை கூட்டத்தில் கலந்து கொண்டபோது ஓர் இளைஞன் காந்தியடிகளை நோக்கி குண்டு வீசினான். அதில் காயமின்றி தப்பிய காந்தியடிகள் அந்த இளைஞனை மன்னித்து விடுமாறு கூறி, போலீஸார் வழங்க முன்வந்த கூடுதல் பாதுகாப்பையும் நிராகரித்துவிட்டார்.

👉 உயிருக்கு ஆபத்து என்று தெரிந்திருந்தும் ஜனவரி 30ஆம் தேதி இன்னொரு பிரார்த்தனை கூட்டத்தில் கலந்து கொண்டார்.

👉 அப்போது எதிர்பாராத விதமாக கைக்கூப்பியிருந்த காந்தியடிகளை நோக்கி மூன்று குண்டுகள் பாய்ந்தது. அதன்பின் கைகள் கூப்பிய நிலையில் 'ஹேராம்... ஹேராம்' என்ற வார்த்தைகளை உதிர்த்தவாறு இந்திய நேரப்படி மாலை சுமார் 5 மணிக்கு தேசப்பிதாவின் உயிர் பிரிந்தது.

👉 ஆங்கில ஆட்சிக்கு எதிராகவும், இந்திய விடுதலைக்காகவும் அந்நியப் பொருட்கள் புறக்கணிப்பு, உப்பு சத்தியாகிரகம், வரி கொடா இயக்கம், ஒத்துழையாமை இயக்கம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் என பலப் போராட்டங்களை அறவழியில் முன்னெடுத்து நடத்தி வெள்ளையர்களை திகைக்கச் செய்தவர். பாரத நாட்டிற்காக தன்னுடைய உயிரையும் காணிக்கையாக்கிய மகாத்மாவின் வாழ்க்கை வரலாறு உலக சரித்திரத்தில் எழுதப்பட்ட அழியா சுவடுகள் ஆகும்.

காந்திஜி பற்றிய தகவல்கள் :

👉 முதன்முதலில் 'தேசத்தந்தை' என்று காந்தியை அழைத்தவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், 'மகாத்மா' என்று அழைத்தவர் ரவீந்திரநாத் தாகூர்!

👉 காந்தி தொடங்கிய 'இந்தியன் ஒப்பீனியன்' குஜராத்தி, இந்தி, தமிழ் மற்றும் ஆங்கிலம் என நான்கு மொழிகளில் வெளியானது.

👉 தாழ்த்தப்பட்ட மக்களுக்கு காந்தி வைத்த பெயர்தான் 'ஹரிஜன்' என்பது, அதன் பொருள் 'கடவுளின் குழந்தைகள்' என்பதாகும்.

👉 'உடற்பயிற்சியின் அரசன் நடைப்பயிற்சி' என்று சொன்ன காந்தி, லண்டனில் சட்டம் பயிலும்போது ஒரு நாளைக்கு 10 மைல்கள் நடந்தே சென்று பணத்தை மிச்சப்படுத்தி படித்தார்.

👉 காந்தி துறவியை போன்றவர். ஆனால், அவரிடம் நகைச்சுவை உணர்வுக்கு பஞ்சமே இருந்தது இல்லை. ஒருமுறை லண்டனுக்கு சென்றபோது, பிரிட்டிஷ் அரசரை முதலும் கடைசியுமாக சந்தித்தார் காந்தி.

👉 ஆறாம் ஜார்ஜ் மன்னரை சந்தித்துவிட்டு பக்கிங்ஹாம் அரண்மனையைவிட்டு அவர் வெளியில் வந்தபோது, அவரைப் பத்திரிக்கையாளர்கள் சூழ்ந்துகொண்டனர். அதில் ஒருவர், 'இவ்வளவு குறைவான ஆடையுடன் வந்திருக்கிறீர்களே குளிரவில்லையா' என்று கேட்டார். அதற்கு காந்தி 'எங்கள் இருவருக்கும் தேவையான அளவு ஆடைகளையும் சேர்த்து மன்னரே அணிந்திருந்தார்' என்று பதில் அளித்தாராம்.

👉 வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின்போது, காந்தி சொன்ன வாக்கியம்தான்..... 'செய் அல்லது செத்து மடி!'

👉 கொள்கை இல்லாத அரசியல், வேலை செய்யாமல் வரும் செல்வம், மனசாட்சியை ஏமாற்றி வரும் இன்பம், பண்பு இல்லாத அறிவு, நியாயம் இல்லாத வணிகம், மனிதம் மறந்த அறிவியல், தியாகம் இல்லாத வழிபாடு இவை காந்தி குறிப்பிட்ட ஏழு சமூக பாவச் செயல்கள்.

👉 தபால் அட்டைகள்தான் உலகத்திலேயே மிகவும் சிக்கனமான தகவல் தொடர்பு சாதனம் என்று கருதியவர் காந்தி.

👉 கடிதங்கள் மிக நேர்த்தியாக மடிக்கப்பட்ட பின்பே உறையில் இட வேண்டும் என்பதில் உறுதியுடன் இருப்பார். காரணம், கடிதம் மடிக்கப்பட்டு இருக்கும் முறையிலேயே உங்களைப்பற்றிய அபிப்ராயம் தோன்றிவிடும் என்பார்.

👉 யாருக்குக் கடிதம் எழுதினாலும் 'தங்களின் கீழ்ப்படிந்த சேவகன்' என்று எழுதியே கடிதத்தை முடிப்பார்.

👉 கிழிந்த துணிகளைத் தானே தைத்துக்கொள்வார். எவ்வளவுதான் வறுமையில் ஒருவர் இருந்தாலும், உடுத்துகின்ற உடைகள் மிகத் தூய்மையாக இருக்க வேண்டும் என்பார். அதை அவரும் கடைபிடித்தார்.

👉 காந்திஜி ஒவ்வொரு இரவும் நாட்குறிப்பு எழுதும் பழக்கம் கொண்டவராக இருந்தார். அதுதான் பின்னாளில் அவரின் சுயசரிதையாகவும் மலர்ந்தது.

👉 'சட்ட மறுப்பு இயக்க போராட்டத்தை கைவிடுங்கள்' என்று வெள்ளையர்கள் சொன்னபோது, அதற்கு காந்தி, தன் 11 அம்சத் திட்டத்தை ஏற்றுக்கொண்டால், போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்தார். அதில் 11வதாக இருந்த திட்டம், 'சுய பாதுகாப்புக்கு தேவையான வெடி பொருட்களையும், ஆயுதங்களையும் தயாரித்து கொள்வதற்கான உரிமம் வழங்குதல் ஆகும்.' அகிம்சையை போதித்தவருக்குள் எப்படி இந்த எண்ணம் உதித்தது என்பது இன்று வரை பலரின் கேள்வி.

👉 எந்த நிலையிலும் ஆங்கிலேயரை உடல் அளவில் காயப்படுத்துவதை அவர் அனுமதிக்கவில்லை. 'நாம் அவர்களை எதிர்த்து போராடவில்லை. அவர்கள் நம்மீது திணிக்கும் அதிகாரத்தைத்தான் எதிர்க்கிறோம்' என்று அதற்கு விளக்கம் அளித்தார்.

👉 தான் தவறு செய்தால், அதற்காக மௌன விரதம் ஏற்பதும்... பிறர் தவறு செய்தால், அந்த தவறு செய்தவர் அதை உணர தான் உண்ணாவிரதம் இருப்பதையும் வாடிக்கையாக கொண்டிருந்தார் மகாத்மா காந்தி.

👉 ஆரம்ப காலங்களில், ஆசிரமத்தில் நடக்கும் தினசரி பிரார்த்தனை கூட்டங்களில், 'கடவுள் உண்மையானவர்!' என்று சொல்லி வந்தார். விடுதலை போராட்டம் உச்சத்தில் இருந்தபோது, 'உண்மையே கடவுள்' என்று மாற்றிக்கொண்டார்.

👉 'என்னிடம் சீடனாக வந்து சேர்ந்த குரு' என்று காந்தி அழைத்தது வினோபாபாவேவைத்தான்.

👉 இந்தியா சுகந்திரம் அடைந்தபோது, அதைக் கொண்டாட மறுத்தவர்கள் இரண்டு பேர். ஒருவர் காந்தி, இன்னொருவர் தந்தை பெரியார்.

No comments:

Post a Comment

Myilsami Annathurai was born on Monday, July 2, 1958, in the village of Kothavadi, Pollachi taluka, Coimbatore district, to Mr. Myilsami, a teacher and Mrs. Balasaraswathi.

Name: Myilsami Annathurai  Born: 02-07-1958  Parents: Myilsami, mother of Balasaraswati  Location: Pollachi, Coimbatore, Tamil Nadu ...