பிறப்பு : 14.11.1889
இறப்பு : 27.05.1964
பெற்றோர் : மோதிலால் நேரு, சுவரூப ராணி அம்மையார்
இடம் : உத்தரப் பிரதேசம்
புத்தகங்கள் : விடுதலையை நோக்கி (Toward Freedom), கண்டுணர்ந்த இந்தியா (Discovery of India), உலக வரலாற்றுத் துளிகள் (Glimpses of World History)
வகித்த பதவி : இந்தியாவின் முதல் பிரதமர்
விருதுகள் : பாரத ரத்னா
வரலாறு:-ஜவஹர்லால் நேரு
👉ஜவஹர்லால் நேரு அவர்கள் 1889ஆம் ஆண்டு நவம்பர் 14ஆம் தேதி உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அலகாபாத்தில் பிறந்தார். இவருடைய தந்தை செல்வந்தரும், வழக்கறிஞருமான மோதிலால் நேரு ஆவார். இவருடைய தாயார் சுவரூப ராணி அம்மையார் ஆவார். இத்தம்பதியினருக்கு நேரு மூன்றாவது குழந்தையாக பிறந்தார்.
👉ஆரம்பக் காலத்தில் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த ஜவஹர்லால் நேருவின் தந்தை மோதிலால் நேரு வழக்கறிஞர் ஆதலால் அப்போது இருந்த ராஜாக்கள், ஜமீன்தார்கள், பெரும் பணக்காரர்களின் வழக்குகளுக்கு இவர் வாதாடியதால் பின்னாளில் பெரும் செல்வந்தராக வளர்ந்து நின்றார். எனவே, மோதிலால் தனது இருப்பிடத்தைப் பணக்காரர்கள் வசிக்கும் பகுதிக்கு மாற்றிக்கொண்டார்.
👉ஜவஹர்லால் நேரு பிறக்கும்போது மாளிகை போன்ற வீட்டில் செல்வ செழிப்புகளுடன், பெரிய அந்தஸ்துடன் இருந்துள்ளது. ஜவஹர்லால் நேருவுடன் பிறந்தவர்கள் இரண்டு சகோதரிகள்,
👉ஒருவர் விஜயலட்சுமி பண்டிட்
👉மற்றொருவர் கிருஷ்ணா நேரு ஹூதீசிங் ஆவார்.
👉இவர்கள் மூவரும் சிறுவயதிலிருந்தே ஆங்கில நாகரிகத்துடன் வளர்க்கப்பட்டவர்கள்.
பெயர் அர்த்தம் :
👉உருதுவில் ஜவஹர்_இ லால் என்றால் 'சிகப்பு நகை' என்று பொருள், இச்சொல்லிலிருந்து 'ஜவஹர்லால்' என்ற பெயர் உருவானது.
ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி :
👉ஜவஹர்லால் நேருவிற்கு இந்தி மொழி, சமஸ்கிருதம் மற்றும் இந்தியக் கலைகள் கற்றுக்கொடுக்கப்பட்டன.
👉மோதிலால் நேரு, இந்தியக் குடிமக்கள் சேவைக்குத் தன் மகன் தகுதி பெற வேண்டும் என்று விரும்பினார். அதற்காக ஜவஹர்லால் நேருவை இங்கிலாந்தில் உள்ள ஹார்ரோவிற்கு அனுப்பினார்.
👉அங்கு அவருக்கு பள்ளிப் பாடத்திட்டம் கடுமையாக இருப்பதாகவும், தங்குமிடம் வீட்டிலிருந்து வெகுதொலைவு இருப்பதாகவும் உணர்ந்தார். இருப்பினும் ஜவஹர்லால் நேரு பள்ளிப்படிப்பை முடித்ததும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுகளை 1907ல் எழுதி, டிரினிட்டி கல்லூரிக்கு சென்று இயற்கை அறிவியல் படித்தார்.
👉ஹார்ரோ கல்லூரி, கேம்ப்ரிட்ஜ் ஆகியவற்றில் படிக்கும்போது அவரின் கலகலப்பான குணத்திற்காக நேருவை 'ஜோ' நேரு என்று அழைப்பார்கள் ஐரோப்பிய நண்பர்கள்.
👉நேரு டிரினிட்டி கல்லூரியில் இயற்கை அறிவியல் மாணவராக இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகியவற்றை படிக்க வேண்டியிருந்தது. கணிதம் அவருக்கு உகந்த பாடமில்லை என்பதால் டிரினிட்டி கல்லூரியில் தாவரவியலை தன்னுடைய விருப்பப்பாடமாக தேர்வு செய்து படித்தார்.
👉1910ஆம் ஆண்டு இயற்கை அறிவியலில் ஹானர்ஸ் பட்டம் பெற்றார். கேம்ப்ரிட்ஜ் மற்றும் டிரினிட்டி கல்லூரியில் படிப்பை முடித்த அவர், இன்னர் டெம்பிலில் சட்டம் பயில பதிவு செய்துக்கொண்டார். அதன்பின் சட்டப்படிப்பை வெற்றிகரமாக முடித்த நேரு தனது சட்டப் பணியை தொடங்க 1912ல் இந்தியா திரும்பினார்.
நேருவின் திருமண வாழ்க்கை :
👉நேரு அவர்கள், 1916ஆம் ஆண்டு பிப்ரவரி 7ஆம் தேதி கமலா கவுல் என்ற பிராமணப் பெண்ணை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு, கமலா நேருவும் சுதந்திர இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.
👉திருமணமான அடுத்த ஆண்டில் இந்திரா பிரியதர்ஷனி என்ற மகள் பிறந்தாள். (பின்னாளில் ஃபெரோஸ் காந்தியை திருமணம் செய்து கொண்ட அவர், 'இந்திரா காந்தி' என என்றழைக்கப்பட்டார்).
👉இருபது ஆண்டுகாலம் நேருவுடன் வாழ்ந்த கமலா நேரு, 1936ல் புற்றுநோயால் இறந்தார். கமலா நேருவின் இறப்பிற்கு பிறகு, கடைசிவரை தனியாகவே வாழ்ந்தார் நேரு.
அரசியல் வாழ்க்கை :
👉மாணவராக இருந்த காலத்திலிருந்தே அயல்நாட்டின் பிடியில் இருந்து பாதிக்கப்பட்டு விடுதலைக்காக போராடுகின்ற தேசங்களின் மீது அவர் ஆர்வம் காட்டி வந்தார். பின் இந்தியாவின் விடுதலை போராட்டத்தில் அவர் ஈர்க்கப்பட்டு அதில் இணைந்து போராடினார்.
👉வழக்கறிஞர் தேர்வில் வெற்றி பெற்று பணியாற்றிக்கொண்டு இருக்கின்றபோதே நேருவிற்கு இந்திய அரசியலின் மீது ஆர்வம் ஏற்பட்டது.
👉அதன்பின் காங்கிரஸ் இயக்கத்தில் காந்தியின் தலைமையின் கீழ் செயல்பட்டார். 1913ஆம் ஆண்டு காந்தியடிகளின் பொது உரிமை போராட்டத்திற்கு (Civil rights Campaign) நிதி வசூலித்துக் கொடுத்தார்.
சுதந்திர போராட்டத்தில் ஜவஹர்லால் நேரு :
👉ஜவஹர்லால் நேரு 1916ல் மகாத்மா காந்தியை முதன்முதலில் சந்தித்தார். முதல் சந்திப்பின்போதே அவர் மகாத்மா காந்தியால் வெகுவாக ஈர்க்கப்பட்டார். இது காந்தி-நேரு இருவருக்குமான இணைப்பிரியா தோழமையின் தொடக்கமாக அமைந்தது.
👉1917ஆம் ஆண்டு அன்னி பெசன்ட் அம்மையார் துவங்கிய தன்னாட்சி இயக்கத்தின் செயலாளர் ஆனார்.
👉'தி இன்டிபென்டன்ட்' இதழை தன்னுடைய தந்தை மோதிலால் நேருவுடன் இணைந்து 1919ல் ஆரம்பித்தார்.
👉நேஷனல் ஹெரால்டு என்ற பத்திரிக்கையை 1938ஆம் ஆண்டு நேரு துவங்கி நடத்தினார்.
👉1919ல் நடந்த 'ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவம்' நேருவை சுதந்திர போராட்டத்தில் ஈடுபட வழிவகுத்தது எனலாம். இந்தியாவின் அம்ரித்சர் நகரில் ஜாலியன் வாலாபாக் என்ற இடத்தில் ஆயுதம் ஏதுமின்றி கூட்டத்தில் பேச்சை கேட்டுக்கொண்டிருந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என பாராமல் ஆங்கில அரசு ரெஜினால்ட் டையர் என்ற ராணுவ அதிகாரியின் தலைமையில் அப்பாவி மக்களைக் கொன்று குவித்தது.
👉அப்பாவி மக்களின் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் வெள்ளையர் ஆட்சியின் மீது நேருவுக்கு வெறுப்புணர்வை அதிகரித்தது மட்டுமல்லாமல் காங்கிரஸ் கட்சியில் அவரை ஈடுபடுத்திக் கொள்ளவும் காரணமாக அமைந்தது.
👉காந்தியின் கொள்கைகளின் மீது அதிக ஈடுபாடுகொண்ட நேருவும், அவருடைய குடும்பமும் விலையுயர்ந்த மேற்கு ஆடைகள் உடுத்துவதை தவிர்த்து கதர் ஆடையை உடுத்தினர்.
👉தந்தையை விடுதலைப் போரில் ஈடுபடுத்திய பெருமை நேருவை சேரும். 'மோதிலால் நேரு இந்திய விடுதலைப் போரில் ஈடுபடக்காரணம் அவர் மகன் மீதான அன்பே. நேருவின் மீதான அன்பே தேசப் போராட்டத்தில் அவரை ஈடுபடுத்தியிருக்கிறது' என்றார் காந்தியடிகள்.
👉காந்தியின் நம்பிக்கைக்குரியவர்களில் ஒருவராக மாறிய நேரு, 1920ல் காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கெடுத்ததற்காக 1921ல் முதன் முதலாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சில மாதங்கள் கழித்து விடுதலை செய்யப்பட்ட அவர், 1924-ல் அலகாபாத் நகராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
👉இரண்டு ஆண்டுகள் தலைமை நிர்வாகியாக சிறப்பாக பணியாற்றிய அவர், 1926ல் தனது பணியை ராஜினாமா செய்தார். பின்னர் 1926 முதல் 1928 வரை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளராக பணியாற்றினார்.
👉நேருவின் தந்தையார் மற்றும் சி.ஆர்.தாஸ் தொடங்கிய 'சுயராஜ்ய கட்சி'-யில் நேரு சேராமல், காந்தியுடனே பணியாற்றினார். நேரு, சுபாஷ் சந்திரபோஸ் அவர்களுடன் இணைந்து பிற விடுதலை பெற்ற நாடுகளுடன் நல்லுறவை பேண விரும்பினார்.
சுதந்திர போராட்டத்தில் நேருவின் பங்கு :
👉இந்திய சுதந்திர போராட்டத்தின் சர்வதேச கண்ணோட்டத்தின் வளர்ச்சியில் நேரு முக்கிய பங்கு வகித்தார்.
👉நேரு இந்தியாவிற்காக வெளிநாட்டு நட்பு நாடுகளை நாடினார். மேலும் உலகம் முழுவதும் சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்திற்கான இயக்கங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தினார்.
👉1926ல் இத்தாலி, சுவிட்சர்லாந்து, இங்கிலாந்து, பெல்ஜியம், ஜெர்மனி, ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார்.
👉1927ஆம் ஆண்டில், அவரது முயற்சிகள் பலனளித்தன. இந்திய தேசிய காங்கிரஸின் பிரதிநிதியாக பெல்ஜியம் புரூசல் பகுதியில் நடைபெற்ற ஒடுக்கப்பட்ட நாடுகளின் கூட்டத்தில் அவர் பங்கேற்றார்.
👉பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திலிருந்து சுதந்திரத்திற்கான போராட்டத்தை பெருநகரத்தின் பல்வேறு பகுதிகளில் பல தேசிய முயற்சியாக நேரு கண்டார்.
நேரு - சுபாஷ் சந்திர போஸ் :
👉உலகெங்கிலும் உள்ள சுதந்திர நாடுகளின் அரசாங்கங்களுடன் நல்ல உறவை வளர்ப்பதில் நேரு, சுபாஸ் சந்திர போஸுடன் சேர்ந்து நெருக்கமாக பணியாற்றினார்.
👉இருப்பினும், 1930களின் பிற்பகுதியில் இருவரும் பிரிந்தனர். பிரிட்டிஷாரை இந்தியாவிலிருந்து வெளியேற்றுவதில் பாசிஸ்டுகளின் உதவியை நாட சுபாஷ் சந்திர போஸ் ஒப்புக்கொண்டார்.
👉அதே நேரத்தில், ஸ்பெயினின் உள்நாட்டுப் போரில் பிரான்சிஸ்கோ பிராங்கோவின் படைகளுக்கு எதிராக போராடும் குடியரசுக் கட்சியினரை நேரு ஆதரித்தார்.
👉1928ல் சைமன் கமிஷனுக்கு எதிராக நடைபெற்ற ஊர்வலத்திற்கு தலைமை தாங்கியதால் காவலர்கள் நேருவின் மீது தடியடி நடத்தினர். 1928ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29ஆம் தேதி அவர் அனைத்து கட்சி மாநாட்டில் கலந்துக்கொண்டார்.
👉நேரு முதன்முதலில் இந்திய தேசிய காங்கிரஸை காந்தியின் வழிகாட்டுதலில், 1929ஆம் ஆண்டு லாகூர் நிகழ்ச்சியை தலைமையேற்று நடத்தினார். நேரு தலைமையில் நடைபெற்ற லாகூர் காங்கிரஸ் மாநாட்டில் முழுச் சுதந்திர தீர்மானம் (Poorna swaraj resolution) நிறைவேற்றப்பட்ட பிறகு காங்கிரஸில் நேருவின் முக்கியத்துவம் கூடியது.
👉பின்னர், ஜனவரி 26, 1930ல் சுதந்திரம் கோரி இந்திய சுதந்திரக் கொடி நேருவால் லாகூரில் பறக்கவிடப்பட்டது. அதே ஆண்டில், இந்தியா உடனான ஆங்கிலேயரின் இணைப்பை துண்டித்து 'சுதந்திர இந்தியா' என்ற அமைப்பை அவர் நிறுவினார். பின்பு அதன் பொதுச்செயலராகவும் பொறுப்பேற்றார்.
👉சத்தியாகிரகம் மற்றும் காங்கிரஸால் ஆரம்பிக்கப்பட்ட பல்வேறு இயக்கங்களில் பங்கேற்றதற்காக 1930 முதல் 1935ஆம் ஆண்டுகளில் அவர் பலமுறை சிறையில் அடைக்கப்பட்டார். 1935ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி அல்மோரா சிறையில் அவர் தனது சுயசரிதையை எழுதி முடித்தார்.
👉1938ல் தேசிய திட்டக்கமிட்டியின் தலைவராக நேரு தேர்வு செய்யப்பட்டார். தேச உருவாக்கம் எப்படி அமைய வேண்டும்? என்பதை திட்டமிடும் பொறுப்பு இந்த கமிட்டிக்கு வழங்கப்பட்டிருந்தது.
👉பண்டிட் நேரு 1940ல் இந்தியாவை வலுக்கட்டாயமாக உலக போரில் பங்கேற்க வைப்பதை கண்டித்து தனிநபராக சத்தியாகிரகம் மேற்கொண்டபோது கைது செய்யப்பட்டார். அதன்பின் டிசம்பரில் மற்ற தலைவர்களுடன் இவரும் விடுதலை செய்யப்பட்டார்.
👉1942ல் வரலாறு சிறப்புமிக்க 'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்திற்கான தீர்மானத்தை மும்பையில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் குழுவில் முன்மொழிந்தார்.
👉இதனால் மற்ற தலைவர்களுடன் நேருவும் கைது செய்யப்பட்டு அகமத் நகர் கோட்டைக்கு அழைத்து செல்லப்பட்டார். இதுவே இவருடைய இறுதியான மற்றும் நீண்டகால சிறைவாசமாகும். இதேபோன்று இவர் 9 முறை கைது செய்யப்பட்டார்.
👉விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக 3,269 நாட்களை நேரு சிறையில் கழித்தார். அங்கே பல அற்புதமான நூல்களை எழுதினார்.
👉ஆங்கிலேயர் ஆட்சி செய்யாத மாகாணங்களை சேர்ந்தவர்களையும் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராக்கும் திட்டத்தை நேருவே செயல்படுத்தினார்.
👉நேருவிற்கு பேரன் பிறந்தபோது மன்னிப்பு கேட்டால் சிறையை விட்டு அனுப்புகிறோம் என்று ஆங்கிலேயர் கூறவே அதை மறுத்துவிட்டார் நேரு.
👉தெருவில் போலீஸ் வாகனம் போகும்போது விளக்கு வெளிச்சத்தில் பேரனை தூக்கி இந்திரா காண்பிக்க, பேரனை பார்த்துவிட்டு, 'இவர்கள் வெளிச்சத்தில் வாழவேண்டும் என்றுதான் நாங்கள் இருளில் உழல்கிறோம்!' என்று கடிதம் எழுதினார்.
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் :
👉1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து தனி சுதந்திர நாடாக இந்தியா விடுதலை பெற்றது. புதுடெல்லியில் சுதந்திர இந்தியாவின் கொடியை ஏற்றும் தனிப்பெருமை நேருவிற்கு வழங்கப்பட்டது. அன்று முதல், சுதந்திர இந்தியாவின் வளர்ச்சிக்கு தன்னை முழுவதுமாக அற்பணித்துக்கொண்டார்.
👉இந்தியாவில் முதல் தேர்தல் 1951ஆம் ஆண்டு டிசம்பரில் தொடங்கி 1952ஆம் ஆண்டு மே வரை நடைபெற்றது. முதல் இந்திய தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மை பெற்று ஜவஹர்லால் நேரு, தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய பிரதமர் என்ற சிறப்பை பெற்றார். மிக அதிக காலம் இந்தியாவின் பிரதமராக இருந்தவர் என்கிற சாதனைக்குரியவர் நேரு.
மொழிவாரி மாநிலம் :
👉1948ஆம் ஆண்டில் ஜவஹர்லால் நேரு, வல்லபாய் படேல், பட்டாபி சீதாராமையா ஆகிய மூவரையும் உறுப்பினராக கொண்டு காங்கிரஸ் கட்சி அமைத்த 'ஜேவிபி' குழுவின் மொழிவாரி மாகாண உருவாக்கத்தை இவர் ஆதரிக்கவில்லை.
👉பிரிவினையை மதரீதியாக நிகழ்த்தி தேசம் தூண்டப்பட்டதால் மொழிவாரி மாநிலங்களுக்கு நேரு அனுமதி தர மறுத்தார்.
👉சென்னை மாகாணத்திலிருந்து தெலுங்கு பேசும் மக்களுக்கான தனி மாகாணமான ஆந்திரா உருவாக்கப்பட வேண்டுமென்று வலியுறுத்தி, உண்ணாவிரதமிருந்து பொட்டி ஸ்ரீராமுலு 1952ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உயிர் நீத்தார்.
👉பொட்டி ஸ்ரீராமுலுவின் மறைவுக்கு மூன்று தினங்களுக்குப் பின் ஆந்திர மாநிலம் அமைக்கப்படுமென்று இந்தியப் பிரதமர் நேரு அறிவித்தார்.
👉இந்தியை தேசிய மொழியாக்க முயற்சிகள் நிகழ்ந்த பொழுது இந்தி பேசாத மாநிலங்களின் அச்சத்தைக் கருத்தில் கொண்டு 'நீங்கள் விரும்பும் வரை ஆங்கிலத்தையே பயன்படுத்தலாம்' என்று உறுதிமொழி தந்தார் நேரு.
👉அவரது ஆட்சியில், இந்தியாவின் வளர்ச்சிக்கு பல திட்டங்களை தீட்டி, நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு சென்றார் என்றால் அது மிகையாகாது.
👉1955ஆம் ஆண்டில், நேருவுக்கு இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
நேருவால் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் :
👉ஐந்தாண்டு திட்டங்கள்
👉வெளியுறவு கொள்கையில் பஞ்சசீலக் கொள்கை
👉அணிசேராக் கொள்கை
👉அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு இடப்பட்ட அடித்தளம்
👉பாகிஸ்தான், சீனப் போர் நெருக்கடிகள்
👉மாநிலங்களின் ஒற்றுமை மற்றும் நலன் கருதி கொண்டுவரப்பட்ட மாநில மறுசீரமைப்பு மற்றும் அலுவல் மொழி ஆணையம்
👉அரசாங்கத்தின் தொழிற்சாலைகளின் முதலீடு மற்றும் விவசாயத்தை வரையறுத்தது
👉தொழிற்சாலைகளை அதிகப்படுத்துதல்
👉வருமான வரிகள் மூலம் கலப்பு பொருளாதாரத்தை உருவாக்குதல்
👉சுரங்கம், மின்சாரம் மற்றும் கனரக இயந்திரங்கள் தொழிற்சாலைகளை அரசாங்கமே நடத்தத் திட்டம்
👉நில மற்றும் பங்கீட்டை முதன்மைப்படுத்துதல்
👉விவசாயக் கிணறுகள்
👉அணைகள் கட்டுதல்
👉விவசாய உற்பத்தியை பெருக்க உரங்கள் உபயோகிக்கும் முறையை செயல்படுத்தியது
👉அணு ஆற்றலில் இந்தியா சிறந்து விளங்கும் திட்டங்கள் ஆகியவை குறிப்பிடத்தக்க வரலாற்று நிகழ்வுகளாகும்.
கல்வி திட்டங்கள் :
👉நேரு, 'இந்தியாவின் எதிர்கால முன்னேற்றம், குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் கல்வியை மேம்படுத்துவதில் தான் இருக்கிறது' என்பதை நன்கு உணர்ந்தார்.
👉அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம்,
👉இந்திய தொழில்நுட்ப கழகங்கள்,
👉இந்திய மேலாண்மை கழகங்கள்,
👉தேசிய தொழில்நுட்ப கழகங்கள் போன்ற அரசாங்க உயர்கல்வி நிறுவனங்களை ஏற்படுத்தி கவனித்து வந்தார்.
👉இலவச கட்டாய கல்வி திட்டத்தை செயல்படுத்தி ஆயிரக்கணக்கான பள்ளிகளை கட்டினார்.
👉சிறந்த கிராமப்புறத் திட்டங்களை ஏற்படுத்தி, பள்ளிகளில் இலவச சத்துணவு திட்டத்தையும் அமல்படுத்தினார்.
👉தாழ்த்தப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு, அரசுப்பணிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீட்டினை ஏற்படுத்தினார்.
நேருவின் வெளியுறவு கொள்கைகள் :
👉நேரு அவர்கள், பல பிரச்சனைகளை திறம்பட சமாளித்து தீர்த்ததால், உலக பார்வையில் 'சமாதானப்படுத்துவதில் மன்னர்' என்றும் ஐக்கிய நாடுகளின் வலுவான ஆதரவாளராகவும் போற்றப்பட்டார்.
👉நேரு இந்திய வெளியுறவு கொள்கையின் சிற்பி எனப் போற்றப்படுகிறார். இந்திய மற்றும் சீன உறவை பேணுவதற்காகவும், அண்டை நாடுகளோடு நட்புறவை நிலை நிறுத்துவதற்காகவும் பஞ்சசீல கொள்கையை வெளியிட்டார்.
பஞ்சசீல கொள்கை :
👉நாடுகள் ஒன்றுக்கொன்று பிரதேச ஒருமைப்பாட்டையும், இறையாண்மையையும் மதித்தல்
👉ஆக்கிரமிப்பை தவிர்த்தல்
👉பிற நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடாமல் இருத்தல்
👉சமத்துவம்
👉பரஸ்பர உதவி மற்றும் சமாதான சகவாழ்வு ஆகியவையே பஞ்சசீல கொள்கைகளாகும்.
அணிசேரா இயக்கம் :
👉அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையே இரண்டாம் உலகப் போருக்கு பின் பனிப்போர் நிலவிய நிலையில் நேரு இரு நாடுகளோடும் சேராமல் மூன்றாம் உலக நாடுகள் தனி அமைப்பாக செயல்படுவதற்காக அணிசேரா இயக்கத்தை (Non-alignment Movement)தொடங்கினார்.
👉முன்னாள் பிரிட்டிஷ் குடியேற்ற நாடுகளை கொண்ட காமன்வெல்த் அமைப்பில் இந்தியா தொடர்வதற்கு நேரு வழிவகை செய்தார்.
👉நேரு பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச அமைப்புகளால் பதினொரு முறை நோபல் (அமைதி) பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.
👉விண்வெளி மற்றும் அணுசக்தி துறையில் முன்னேற்றத்திற்கான விதைகள் அவர் காலத்திலே போடப்பட்டன. அயல்நாட்டில் இருந்த இந்திய விஞ்ஞானிகள் பலர் நேருவின் வேண்டுகோளால் இந்தியாவில் சேவை செய்ய வந்து சேர்ந்தார்கள்.
நேருவின் மறைவு :
👉நேருவின் ஆட்சிக்காலத்தில் இந்தியாவின் முதலாவது தேசிய ஆய்வுக்கூடமாகிய தேசிய இயற்பியல் ஆய்வுக்கூடமும், அதை தொடர்ந்து மேலும் 17 தேசிய ஆய்வுக்கூடங்களும் ஏற்படுத்தப்பட்டன. 1948ஆம் ஆண்டு ஹோமி ஜஹாங்கீர் பாபா தலைமையில் இந்திய அணுசக்தி ஆணையம் நிறுவப்பட்டது.
👉சீனா உடனான போரில் இந்தியா தோல்வி அடைந்ததை அடுத்து பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நேருவின் மீது முதன்முதலாக நம்பிக்கை இல்லாத தீர்மானம் கொண்டு வந்தன. ஆனால், தீர்மானம் தோல்வி அடைந்தது.
👉சீனாவைப்பற்றி அவரின் 'உலக வரலாற்றுத்துளிகள் (Glimpses of World History)' நூலில் நூற்றுக்கும் மேற்பட்ட குறிப்புகள் காணப்படுகின்றன. அந்த தேசம் திடீர் தாக்குதல் தொடுத்து எல்லை சிக்கலை தீர்க்க பார்த்தது பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இதனால் ஐந்து மாதங்களில் மூன்று முறை பக்கவாதத்துக்கு உள்ளாகி இறுதி நாட்களை நோக்கி நகர்ந்தார்.
👉1964ஆம் ஆண்டு காஷ்மீரிலிருந்து திரும்பிய நேரு பக்க வாதத்தாலும், மாரடைப்பாலும் அவதிப்பட்டார். அவர் 1964, மே 27ஆம் தேதி அதிகாலை இறைவனடி சேர்ந்தார். அவருடைய உடல், யமுனை நதிக்கரையில் உள்ள சாந்திவனத்தில் தகனம் செய்யப்பட்டது. இவரின் மறைவிற்கு ஆயிரக்கணக்கான மக்கள் மௌன அஞ்சலி செலுத்தினர்.
நேருவின் இறுதி ஆசை :
👉நான் இறந்த பிறகு எனது உடலை எரியூட்ட வேண்டும். எந்தவிதமான மதச்சடங்குகளும் செய்யக்கூடாது. அவற்றில் எனக்கு நம்பிக்கையும், உடன்பாடும் இல்லை.
👉கொஞ்சம் சாம்பலை எடுத்து கங்கையில் கரையுங்கள். கங்கையில் கரைக்கச் சொல்வது மத நம்பிக்கையினால் அல்ல. கங்கை நான் நேசித்த ஜீவநதி. அதனோடு சங்கமிக்க விரும்புகிறேன்.
👉மிச்சமிருக்கிற சாம்பலை இந்தியாவின் வயல்கள் எங்கும் தூவுங்கள். உழவர்கள் உழுது தானியங்களை விளைவிக்கும் அந்த மண்ணோடு மண்ணாக, இந்தியத் திருநாட்டின் காற்றோடு காற்றாகக் கலந்து கிடக்க விரும்புகிறேன் என்றார்.
👉ஒரு சுதந்திரமான, சமத்துவமான ஜனநாயக நாட்டை உருவாக்க வேண்டும் என்ற நேருவின் கனவுதான் இந்தியாவிற்கு வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தது என்றால் அது மிகையாகாது.
நேருவின் படைப்புகள் :
👉விடுதலையை நோக்கி (Toward Freedom)
👉கண்டுணர்ந்த இந்தியா (Discovery of India)
👉உலக வரலாற்றுத் துளிகள் (Glimpses of World History)
நேருவின் பெயரை பறைச்சாற்றும் நினைவுச்சின்னங்கள் :
👉இந்தியா முழுவதும் கல்விநிலையங்கள், விளையாட்டு அரங்கங்கள், தெருக்கள், சாலைகள் மற்றும் பல பொது நிறுவனங்களுக்கு நேருவின் பெயர் சூட்டப்பட்டு அவருடைய நினைவைப் பறைச்சாற்றுகின்றன.
👉1989ஆம் ஆண்டு, சோவியத் ஒன்றியத்தால் நேருவின் தபால் தலை வெளியிடப்பட்டது.
👉மும்பையில் உள்ள ஒரு துறைமுகத்திற்கு 'நேரு துறைமுகம்' என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
👉நேரு பிரதமராக இருந்தபோது, அவர் வசித்து வந்த 'தீன் மூர்த்தி பவன்', தற்போது அவர் நினைவாக அருங்காட்சியகமாக மாற்றப்பட்டு, இந்திய அரசால் பராமரிக்கப்பட்டு வருகிறது.
👉லண்டனில் உள்ள ஆல்ட்விச்சில் நேருவிற்கு சிலை எழுப்பப்பட்டுள்ளது.
👉நேரு அவர்கள், வாழ்நாள் முழுவதும் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் நலன், கல்வி மற்றும் அக்கறையுடன் பாடுபட்டதை நினைவூட்டும் வகையில் அவரின் பிறந்தநாளான, நவம்பர் 14ம் தேதியை இந்தியா முழுவதும் 'குழந்தைகள் தினமாக' கொண்டாடுகிறோம்.